வன்முறையால் குறிக்கப்பட்ட மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்களுக்குப் பிறகு, டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி டி.எம்.சி மூன்று நிலை தேர்தல்களில் வெற்றி பெற்றதை செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகள் காட்டுகின்றன.
இப்போது மேற்கு வங்கம் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ள பா.ஜ.க இரண்டாவது இடத்திலும், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஆரம்பத்தில், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ(எம்) கூட்டணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த இடைத்தேர்தலில் முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இருப்பினும், ஆரம்ப போக்குகளில், இரு மாவட்டங்களிலும் டி.எம்.சி எதிர்க்கட்சியை விட முன்னிலையில் இருந்தது.
மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ஒரு சக்தியாக வளர்ந்து வரும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF), அதன் கோட்டையான பாங்கரில் சிறப்பாக செயல்பட்டது. சி.பி.ஐ (எம்) உடனான ஐ.எஸ்.எஃப்-ன் கூட்டணி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புக் குழு ஆகியவை டி.எம்.சி-க்கு பாங்கரின் சில தொகுதிகளில் கடுமையான போட்டியை அளித்தன. இது தேர்தலில் சில மோசமான வன்முறைகளைக் கண்டது.
மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களில் 18,590 இடங்களை டி.எம்.சி வென்றது. பா.ஜ.க 4,479 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சி.பி.எம் 1,426 இடங்களையும், காங்கிரஸ் 1,071 இடங்களையும் பெற்றுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரஸின் அதே கிராம பஞ்சாயத்து தொகுதிகளில் 1,062 இடங்களில் வெற்றி பெற்றனர்.
மொத்தமுள்ள 3,317 பஞ்சாயத்துகளில் டி.எம்.சி 2,138 இடங்களிலும், பா.ஜ.க 122 இடங்களிலும், காங்கிரஸ் 26 இடங்களிலும், இடது முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. மாநிலம் முழுவதும் உள்ள 103 கிராம பஞ்சாயத்துகளில் சுயேச்சைகள் உட்பட மற்ற கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.
218 இடங்களைக் கொண்ட பங்கர்-II தொகுதியின் 10 கிராம பஞ்சாயத்துகளில், டி.எம்.சி போட்டியின்றி 86 இடங்களை வென்றது. வாக்குப்பதிவு நடந்த 132 இடங்களில், டி.எம்.சி 63 இடங்களையும், சி.பி.ஐ(எம்)-ஐ.எஸ்.எஃப்-ஜோமி ஜிபிகா பஸ்துதந்த்ரா அல்லது பொரிபேஷ் ரோக்கா கமிட்டி 68 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன (சி.பி.எம் 7, ஐ.எஸ்.எஃப் 43 மற்றும் ஜோமி ஜிபிகா 18). மேலும், இந்த கூட்டணி ஒரு கிராம பஞ்சாயத்திலும் வெற்றி பெற்றது.
ஜோமி ஜிபிகா தலைவர் மிர்சா ஹக்கீம் கூறுகையில், “பங்கர் டி.எம்.சி-யை நிராகரித்ததை முடிவுகள் காட்டுகின்றன. 86 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் எங்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், 86 இடங்களில் பெரும்பான்மையாக வெல்வோம்” என்றார்.
ஐ.எஸ்.எஃப் தலைவர் நௌஷாத் சித்திக் கூறுகையில், “உண்மையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால், அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதை டி.எம்.சி அறிந்திருந்தது. எனவே, வேட்புமனுத் தாக்கல் நேரம் தொடங்கிய பிறகு அவர்கள் எல்லையற்ற வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். எதிர்கட்சிகள் எங்கெல்லாம் எதிர்த்துப் போராட முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
பஞ்சாயத்து சமிதிகளில், மாலை 6 மணி நிலவரப்படி 9,740 இடங்களில் 112 இடங்களில் டி.எம்.சி வெற்றி பெற்று 59 இடங்களில் முன்னிலை வகித்தது. பா.ஜ.க 9 பஞ்சாயத்து சமிதிகளில் முன்னிலை வகித்தது. இடது முன்னணி 2 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
ஜில்லா பரிஷத் (மாவட்ட உள்ளாட்சி அமைப்பு தேர்தல்) இடங்களில் மாலை 6 மணிக்குள் மொத்தமுள்ள 928-ல் 18 இடங்களில் வெற்றி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. மீதமுள்ள இடங்களுக்கான முடிவுகள் இன்னும் வரவில்லை.
கோர்க்கா பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) கீழ் வரும் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் ஆகிய மலை மாவட்டங்களில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல்களில், டி.எம்.சி-யின் கூட்டணிக் கட்சியான அனித் தாபாவின் பாரதிய கூர்க்கா பிரஜாதந்திரிக் மோர்ச்சா (பி.ஜி.பி.எம்) தொடக்கத்தில் முன்னிலை வகித்தது.
ஆனால் கடைசியாக முடிவுகள் வரும் வரை 70 கிராம பஞ்சாயத்துகளில் 33-ல் பி.ஜி.பி.எம் வெற்றி பெற்றதற்கு எதிராக, டி.எம்.சி இன்னும் தனது கணக்கைத் திறக்கவில்லை. இந்த கூட்டணி இணைந்து ஜி.டி.ஏ-வைக் கட்டுப்படுத்துகிறது.
பிமல் குருங், பினாய் குருங் மற்றும் அஜய் எட்வர்ட்ஸ் ஆகிய மூன்று பெரிய தலைவர்கள் ஒன்றிணைந்து, ஜி.டி.ஏ பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க-வின் ஆதரவுடன் ‘ஐக்கிய கூர்க்கா கூட்டணி’யின் கீழ் இணைந்து போராடியதிலிருந்து மலை மாவட்டங்களின் அரசியல் குழப்பத்தில் உள்ளது.
ஜூலை 8-ஆம் தேதி 61,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் 80.71 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையில், குறைந்தபட்சம் 21 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் வாக்குச்சாவடி கைப்பற்றுதல், வாக்குப்பெட்டி சூறையாடல் மற்றும் வாக்குச் சீட்டுகளை அழித்ததாக செய்திகள் வெளியானது.
மேற்கு வங்கத்தில் 63,229 இடங்களுடன் 3,317 கிராம பஞ்சாயத்துகளும், 9,730 இடங்களுடன் 341 பஞ்சாயத்து சமிதிகளும், 928 இடங்களுடன் 20 ஜில்லா பரிஷத்களும் உள்ளன.
டி.எம்.சி தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, தங்கள் கட்சிக்கு ஆதரவு அளித்த மேற்கு வங்க மக்களுக்கு நன்றி தெரிவித்தார். “மேற்கு வங்கத்தில் மாநில அரசை இழிவுபடுத்துவதற்கான ஆதாரமற்ற பிரச்சாரத்துடன் கூடிய தீங்கிழைக்கும் பிரச்சாரம் கூட வாக்காளர்களை திசைதிருப்ப முடியாது” என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.
மேற்கு வங்க அமைச்சர் பாபுல் சுப்ரியோ, “பா.ஜ.க உறுதியான தளத்தைக் கண்டுபிடிக்க போராடுவது போல் தெரிகிறது… வங்காள மக்கள் சத்தமாகவும் தெளிவாகவும் பேசி, பா.ஜ.க-வின் பிரிவினைவாத அரசியலுக்கு மீண்டும் கதவை மூடிவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரி கூறுகையில், “வாக்குகள் டி.எம்.சி-யால் கொள்ளையடிக்கப்பட்டது. தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடத்தப்பட்டிருந்தால், டி.எம்.சி 20,000 பஞ்சாயத்து இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது.” என்று கூறினார்.
நடந்த வன்முறையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு ஆச்சரியமாக இல்லை என்று சுவேந்து அதிகாரி கூறினார். “எங்கள் மத்திய தலைவர்கள் கவலைப்படவில்லை, ஏனென்றால் டி.எம்.சி வெற்றி பெறும் என்று ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தனர். அவர்கள் பரவலான தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்… எனவே, இது மக்களின் ஆணையின் உண்மையான பிரதிபலிப்பு அல்ல” என்று சுவேந்து அதிகாரி கூறினார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்த அறிக்கையையும் பா.ஜ.க முன்னிலைப்படுத்தியது: “நேற்று, மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை காரணமாக உயிருக்கு பயந்த 133 நபர்கள் அசாமின் துப்ரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தனர். நாங்கள் அவர்களுக்கு நிவாரண முகாமில் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்.” என்று பதிவிட்டிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.