மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் தலைமைச் செயலாளரான ராஜீவ் சின்ஹா கடந்த ஜூன் 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற அடுத்த நாளே அதாவது ஜூன் 7-ம் தேதி அன்று மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வன்முறைகள் நடந்து வருகின்றன. இந்த அரசியல் வன்முறையால் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இறந்தவர்களில் 5 பேர் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) கட்சியினர், இருவர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலா ஒருவர் சி.பி.எம், ஐ.எஸ்.எஃப் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் வன்முறை நடந்த பகுதிகளை ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் நேரில் பார்வையிட்டு வருகிறார். வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியும் வருகிறார். மேலும், ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் ஒரு கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ள அவர், அதற்கு "அமைதி அறை" என்று பெயரிட்டு வன்முறை பற்றிய புகார்களை அனுப்ப மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதைத் "தவறு கண்டறியும் பணி" என்று கருதாமல் "உண்மை கண்டறியும் பணியாக" பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆளுநர் போஸ் உரையாடிய சில வீடியோக்கள் ராஜ்பவனால் பகிரப்பட்டும் வருகின்றன. இந்த வன்முறை குறித்து அவர் பேசுகையில், “மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் வன்முறை உள்ளது என்பதை எனது களப் பயணங்கள் எனக்கு உணர்த்தியுள்ளன. கொலை அரசியல், மிரட்டல் அரசியல், அடியாள் அரசியல் என்று என்னென்னவோ வெளிப்படுகிறது." என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஜூலை 8 வாக்குப்பதிவுக்கு முன்னதாக வன்முறை நடந்த பகுதிகளுக்கு ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் சென்றதற்கு எதிராக புகார் அளித்து மூன்று பக்க கடிதத்தை மாநில தேர்தல் ஆணையத்திற்கு (எஸ்இசி) அனுப்பியுள்ளது.
தன்னை "கிரவுண்ட் ஜீரோ கவர்னர்" என்று அழைத்துக் கொண்ட போஸ், கடந்த சில நாட்களாக இந்த திடீர் மேற்பார்வையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார், தேர்தல் தொடர்பான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து, சட்டத்திற்கு புறம்பானது மற்றும் போதிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகளுக்கு எண்ணெய் ஊற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆளுநர் போஸ் இதுவரை கூச்பெஹாரில் உள்ள தின்ஹாட்டாவிற்கும், பாங்கருக்கும் (மோசமான சில மோதல்கள் நடந்த இடம்), பசந்தி மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களுக்கும் சென்றுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஆளுநர் போஸ் பாஜக தொண்டர்களை அரசின் விருந்தினர் இல்லங்கள் அல்லது சர்க்யூட் ஹவுஸ் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி சந்தித்துள்ளார். மாண்புமிகு ஆளுநரின் நடவடிக்கைகள், அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், தேர்தல் பிரச்சாரம் அல்லது பிரச்சாரத்திற்கு சமம்.
ஒரு இணையான அரசாங்கம் இருப்பதை சித்தரிக்க ஒரு தெளிவான முயற்சியாக இது உள்ளது. அங்கு அவரும் (ஆளுநர் போஸ்) பாஜக உறுப்பினர்களும் இணைந்து நியாயமான தேர்தல் பிரச்சாரத்தை நடத்த முயற்சிக்கின்றனர். நிலைமையை மிகவும் கவலைக்கிடமானது. ஜனநாயகத்தின் சாவுமணி அதன் பாதுகாவலர்களின் கைகளில் ஒலிக்கக்கூடாது. இது மாநில தேர்தல் ஆணையத்தின் புனிதத்தின் மீது ஒரு நிழலைப் போட்டது போன்ற அவரது கருத்துக்களையும் அது கேள்விக்குள்ளாக்கியது.
ஆளுநரும் தேர்தல் செயல்பாட்டில் தலையிடுகிறார், தனது சுயாதீன விசாரணைகள் மற்றும் "தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிட ராஜ்பவனில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளார். " என்று கூறியுள்ளது.
இதனிடையே, ஆளுநர் போஸுக்கு எதிரான கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். “ஒரு ஜனநாயக மாநிலத்தில் ஆளுநர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். தற்போது தோல்வி பயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவரை விமர்சித்து வருகின்றனர். ஆளுநர் முர்ஷிதாபாத் (சௌத்ரியின் கோட்டை) வருவதை நாங்கள் வரவேற்கிறோம்." என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் பேசுகையில், "இந்த மாநிலத்தின் அரசியலமைப்புச் சட்டத் தலைவர் ஆளுநர். எனவே, மாநிலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அவர் எதையும் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil