/indian-express-tamil/media/media_files/2025/02/24/Q0jYeo4IZBRtxWj96Axl.jpg)
தெலங்கானாவின், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த தொழிலாளர்கள், தங்கள் மனம் இருளாக இருப்பதாக உணர்கின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘We were told there’s leakage… but that’s happened several times’: Workers recount chaos inside Telangana tunnel, where 8 men are trapped
"எங்களைப் போலவே, அவர்களும் இது ஆபத்தான வேலை என்று தெரிந்தும் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில், அதன் வருமானம் அவர்களின் குடும்பம் வாழ உதவுகிறது. சிறிய அளவிலான நீர் கசிவு சம்பவங்கள் குறித்து அடிக்கடி பேசி இருப்போம். ஆனால் நாங்கள் வேலை செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து வேறு வழி இல்லை" வெல்டிங் பணி செய்யும் தொழிலாளியான சஞ்சய் சாஹ் இவ்வாறு கூறியுள்ளார். சுரங்கத்தின் ஒரு பகுதி நேற்று உடைந்து 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை காலை 7 மணியளவில் சுரங்கப்பாதைக்குள் சென்ற 50 பேரில் சஞ்சயும் ஒருவர். அப்போது, சிறிது நேரத்தில் சுரங்கப்பாதை கூரையின் ஒரு பகுதி 13.5 கிமீ உள்ளே இடிந்து விழுந்தது. சஞ்சய் மற்றும் 41 பேரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். ஆனால் அவர்கள் சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய பிறகுதான் எட்டு பேர் வெளியேறவில்லை என்பதை உணர்ந்தனர்.
"சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவு ஏற்படுவது குறித்து இரவு ஷிப்ட் ஊழியர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் இது பல முறை நடந்துள்ளது, நாங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம்" என்று அவர் கூறினார். அவர்கள் சுரங்கப்பாதையில் 13 கிலோமீட்டர் தூரம் நடந்தனர். இதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது என்று சஞ்சய் கூறினார்.
"நாங்கள் அங்கு சென்ற 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, மண் துண்டுகள் விழ ஆரம்பித்தன. நான் 20 மீட்டர் தொலைவில் இருந்தேன் (சரிவு நடந்த இடத்திலிருந்து). ஷிப்ட் இன்சார்ஜ் எங்களை நகரச் சொன்னார். மேலும், அலாரம் அடிக்கப்பட்டது. நாங்கள் தான் ஓடினோம். சில நிமிடங்களில், பலத்த சத்தம் கேட்டது, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நாங்கள் வெளியே வந்து வருகைப் பதிவேட்டைச் சரிபார்த்தபோதுதான் எட்டு பேர் வெளியேறவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்" என்று சஞ்சய் கூறினார்.
சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 300 பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனர். இதில் 128 பேர் தேசிய பேரிடர் மீட்புப் படை, 120 பேர் மாநில பேரிடர் மீட்புப் படை , 23 பேர் சிங்கரேணி காலியரீஸ் மற்றும் 24 பேர் ராணுவத்தினர்.
சுரங்கப்பாதைக்குள் 13 கி.மீ.க்கு மேல் மீட்புப் படையினர் சென்றடைந்தாலும், அடுத்த சில நூறு மீட்டர்களில் தண்ணீர் மற்றும் சேறும் சகதியுமாக இருப்பதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை, மீட்புப் பணிகளை மேற்பார்வையிடும் என்.டி.ஆர்.எஃப் கமாண்டன்ட் பிரசன்ன குமார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், அவர்கள் அப்பகுதியில் தண்ணீரை வெளியேற்றியதாகக் கூறினார்.
"இப்போது, நாங்கள் சேற்றை அகற்றிவிட்டு மறுபக்கத்தை அடைய முயற்சிக்கிறோம். கடுமையான சேறு மற்றும் அபாயங்கள் காரணமாக ஜிக்-ஜாக் முறையில் குழு நகர்வதால் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. இன்று இரவு எட்டு பேர் சிக்கியிருப்பதாக கருதப்படும் இடத்தை நாங்கள் அடைவோம் என நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்க மூன்று வழிகளில் முயற்சி மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெலங்கானா நீர்ப்பாசன அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்திருந்தார்.
சுரங்கப்பாதையை ஆய்வு செய்த ராணுவ வீரர்கள், "சுரங்கப்பாதையின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விரைவான மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளனர். தெலங்கானா மற்றும் ஆந்திரா துணைப் பகுதி ராணுவக் குழுக்கள் மீட்புப் பணியை ஒருங்கிணைத்து வருவதாக ராணுவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் இருந்து பைசன் பிரிவின் பொறியாளர் பணிக்குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மற்ற தொழிலாளர்கள் அனைவரின் மனமும் இருளடைந்ததை போன்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- Sreenivas Janyala , Nikhila Henry
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.