ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக சொன்னது என்னாச்சி? என்று பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்லாரி மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், நேற்று 3-வது நாளாக ராய்ச்சூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். ராய்ச்சூர் டவுனில் உள்ள மசூதிக்கு ராகுல்காந்தி சென்று பிரார்த்தனை செய்தார். 15 நிமிடங்கள் வரை அங்கிருந்த அவரை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது அவருடன் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து தேவதுர்காவுக்கு ராகுல்காந்தி பஸ்சில் புறப்பட்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். மேலும் சில இடங்களில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல்காந்தி கைகுலுக்கினார். ராய்ச்சூர் டவுனில் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் ராகுல்காந்தி பேசியதாவது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா நிறைவேற்றியுள்ளார். பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் ஒரு போதும் கொடுத்தது கிடையாது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை முதல்-மந்திரி சித்தராமையா கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் மனதில் சித்தராமையா இடம் பிடித்து விட்டார்.
இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அரசு மீது மக்களிடையே எந்த விதமான எதிர்ப்பு அலையும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறது. ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை அருகில் வைத்து கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு கூறுகிறார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனின் சொத்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடியாக இருக்கிறது.
அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதுபற்றி பிரதமர் பேச தயங்குவது ஏன்?. தேர்தலுக்கு முன்பாக 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நமது நாட்டை விட சீனாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க, அந்த நாடு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.