பட்ஜெட் 2018: அருண்ஜெட்லி அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பம்சம் என்ன?

இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன்மூலம், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும் என அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். மேலும், அதே ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியும் இத்திட்டத்தை வலியுறுத்தினார். இத்திட்டமானது, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமைச்சரவையில் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தனது பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவித்தார் அருண் ஜெட்லி. அப்போது, உலகளாவிய சுகாதார பாதுகாப்பை நோக்கி அரசு மெதுவாகவும், சீராகவும் முன்னேறி வருவதாக தெரிவித்தார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டானது பொருளாதார வளர்ச்சியை குலைக்காமல், நிதி ஒழுங்கை கடைபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

×Close
×Close