தமிழகத்தில் அகல ரயில்பாதை திட்டம் எந்த நிலையில் உள்ளது? கனிமொழி எம்பி கேள்வி

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், அகலரயில் பாதைகளாக மாற்றும் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும், அகலரயில் பாதைகளாக மாற்றும் திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மகளிரணித் தலைவருமான கனிமொழி கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அளித்த பதில் பின் வருமாறு:

225 கிலோ மீட்டர் தொலைவுள்ள திண்டுக்கல் – பொள்ளாச்சி – பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி கோயம்பத்தூர் அகல ரயில் பாதை திட்டம் 2006-2007 ஆண்டு தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

225 கிலோ மீட்டர் தொலைவுள்ள மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி – திருத்துரைப்பூண்டி – அகஸ்தியம்பாளையம் அகல ரயில்பாதை திட்டம் 2007-2008ம் ஆண்டு தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.

90 கிலோ மீட்டர் தொலைவுள்ள மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டம், போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தால் உரிய நேரத்தில் தொடங்கப்படவில்லை. டிசம்பர் 2016ல், 302 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மொத்தம் 539 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை திட்டமிடப்பட்டு, அதில் 263 கிலோ மீட்டர் செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. 276 கிலோ மீட்டருக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அடிப்படையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், திட்டங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியவில்லை.

பழமையான ரயில்பாதைகளை தவிர்த்து மீதம் உள்ள 826.86 கிலோ மீட்டர் தூரம் உள்ள பாதைகள் அனைத்தயும் அகல ரயில் பாதைகளாக மாற்ற 2017-18 நிதியறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு ரயில்வேயில் உள்ள அனைத்து தடங்களும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன.

இந்தியாவில் உள்ள ரயில்வே பிரிவுகளில், கிழக்கு மத்திய ரயில்வே, வட மேற்கு ரயில்வே, வட கிழக்கு ரயில்வே, தென்னக ரயில்வே, மற்றும் மேற்கு ரயில்வேயில் தற்போது மீட்டர் கேஜ் பாதைகள் உள்ளன. வடக்கு மத்திய ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயில் மட்டுமே குறுகிய ரயில்பாதைகள் செயல்பாட்டில் உள்ளன.

திட்டங்களை விரைவாக நிறைவேற்ற கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2014-15ல் 58,718 ஆக இருந்த நிதி ஒதுக்கீடு 2015-16ல் 93,795 கோடியாகவும், 2015-16ல் 1,11,661 கோடியாகவும், 2017-18ல் 1,31,000 கோடியாகவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது.

பணிகளுக்கான டெண்டர்கள் வழங்குவது தொடர்பாக, மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இது திட்டங்களுக்கான ஒப்புதலை வழங்குவதை துரிதப்படுத்துகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டுக கழகம், ரயில்வேயின் முக்கிய திட்டங்களுக்காக 1.5 லட்சம் கோடி கடன் அளிக்க முன் வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு தொடர்ந்து ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென்றும், தனியாக ஒரு ரயில்வே அதிகாரி இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார்.

இது போன்ற முயற்சிகளால் புதிய ரயில்வே பாதைகள், அகல ரயில் பாதைகள் போன்றவற்றை உருவாக்குவதில் வேகம் அதிகரித்தள்ளது. கடந்த பத்தாண்டுகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.1 கிலோ மீட்டராக இருந்த புதிய ரயில்பாதைகள் அமைக்கும் பணி, தற்போது ஒரு நாளைக்கு 7.75 என உயர்ந்துள்ளது. 2016-17ல் 2855 கிலோ மீட்டர் புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close