வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சி தலைவர்களிடம் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு மோடி 6 நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் இரு நாடுகளிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி இன்று (திங்கள்கிழமை) அதிகாலை இந்தியா திரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் வரவேற்றனர். அதோடு டெல்லி பா.ஜ.க தலைவர்கள், எம்.பிக்கள் ஹர்ஷ் வர்தன், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரும் உடனிருந்தனர்.
டெல்லி வந்த பிரதமர் மோடி ஜே.பி நட்டா மற்றும் கட்சி தலைவர்களிடம் பேசினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.பி மனோஜ் திவாரி, "பிரதமர் மோடி இங்கே என்ன நடக்கிறது என்று நட்டா ஜியிடம் கேட்டார். அதற்கு நட்டா, 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். நாடு மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் பதிலளித்தார்" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா, நாட்டில் என்ன நடக்கிறது என்றும், கட்சியின் செயல்திட்டம் பற்றியும் பிரதமர் கேட்டார். அதற்கு நாங்கள் அவரிடம் பதிலளித்தோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“