இந்தியாவில் பத்திரிகையாளர்கள், சில முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு, வாட்ஸ்அப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியா என்பவரது வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய அரசிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில் தனது மொபைல் போன் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாகவும், இது வெளியே கசிந்துள்ளதாகவும் , இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.
இது போல் நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மலைவாழ், தலித் சமூக ஆர்வலர்கள், போராளிகள், சில வக்கீல்கள் வாட்ஸ்ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 1400 பேர் வாட்ஸ்அப் பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வாட்ஸ்அப் நிர்வாகத்திடம் மத்திய அரசு, விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் வாட்ஸ்அப் நிர்வாகம் முழு விவரத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலை மையமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் இந்த உளவு வேலையில் ஈடுபட்டுள்ளது. சிலரது மொபைல்போன்களை ஹேக் செய்ததாகவும் , பாஸ்வேர்டுகளை திருடி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இது போல் வெளிநாடுகளிலும் பிரபல சமூக ஆர்வலர்கள் வாட்ஸ்ஆப் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. யார் யார் போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. இவ்வாறு வாட்ஸ்ஆப் நிர்வாக அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .