யூசுஃப் அசார்.... மொஹம்மத் சலீம் என்றால் அனைவரும் சட்டென்று அறிவர். இந்திய விமானப்படை நேற்று(பிப்.26) அதிகாலை நடத்திய துல்லிய தாக்குதல் பகுதியான பாலகோட்டில், ஜெய்ஷ்-இ-மொஹம்மத் அமைப்பின் மிகப்பெரிய பயிற்சி முகாமை நடத்தி வந்தவன். இவனையும் சேர்த்தே இந்திய விமானப் படை காலி செய்தது. இந்த யூசுஃப் உட்பட, 7 பேர் தான் 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் ஆவர். அந்த 7 பேரில் சிபிஐ-யால் அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி இப்ராஹிம் அத்தர். இவன் தான் ஜெய்ஷ்-இ-மொஹ்ஹமத்தின் தலைவன் மசூத் அசாரின் சகோதரன்.
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதி
மசூத் அசாரின் சகோதரனும், யூசுஃப்பும் ஜம்முவில் 1998ல் கைது செய்யப்பட்டனர். ஆனால், விரைவில் ரிலீஸ் செய்யப்பட்டனர். டிசம்பர் 24, 1999ம் ஆண்டு IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. ஏன் தெரியுமா? மசூத் அசார் மற்றும் இதர இரண்டு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று. ஏழு நாள் போராட்டத்திற்கு பிறகு, இவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
காத்மண்டுவில் இருந்து கிளம்பி டெல்லியை நோக்கி விரைந்து கொண்டிருந்த IC-814 விமானம், இந்திய எல்லைக்குள் நுழைந்த போது கடத்தப்பட்டது. அங்கே சுற்றி, இங்கே சுற்றி இறுதியில் ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில், யூசுஃப்க்கு எதிரான Red Corner Notice-ஐ (RCN) சிபிஐ பத்திரப்படுத்தி வைத்துள்ளது. அந்த RCN-ல் யூசுஃப்பின் பிறந்த இடம் கராச்சி என்றும், அவன் உருது மற்றும் ஹிந்தி பேசுவான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைஜேக், ஆள் கடத்தல், கொலை ஆகிய சம்பவங்களில் யூசுஃப்புக்கு தொடர்புள்ளது. விமானத்தை கடத்திய போது, அவனுக்கு 28 வயதிருக்கும் என நம்பப்படுகிறது.
இன்டர்போல் அறிக்கையின்படி, யூசுஃப் "நல்ல கட்டமைப்பான உடல்", இருள் கண்கள், கருப்பு முடி ஆகியவை அவனது அங்க அமைப்புகளாக உள்ளது. யூசுஃப், இப்ராஹிம் மற்றும் மசூத் அசாரின் சகோதரர் ஆகிய மூவரும் தான் விமான கடத்தலில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டதாக சிபிஐ விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த அப்துல் லத்திஃப் என்பவருடன் கைக்கோர்த்த யூசுப், மசூத் தப்பிப்பதற்கான திட்டம் தீட்டினார்.
சிபிஐ அறிக்கையின்படி, விமானத்தை கடத்துவதற்கு பொருளாகவும், நிதியாகவும், பாஸ்போர்ட் மற்றும் போலி டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை தயாரித்து கொடுத்தவன் இந்த லத்திஃப். (பிறகு ஜம்முவில் லத்திஃப் கைது செய்யப்பட்டான்). இதில் யூசுஃப்பின் பங்கு என்னவெனில், விமானத்தை கடத்துவதற்கு 1998 ஜூலை-ஆகஸ்ட் காலத்தில் சதி தீட்டப்பட்டது. அப்போது, யூசுஃப் லத்திஃபை நாடி, அவன் வங்கதேசத்திற்கு செல்ல, முஹம்மத் சலீம் முஹம்மது கரீம் என்ற பெயரில் போலி இந்தியன் பாஸ்போர்ட் பெற்றான். இதை செய்து கொடுத்தவன் லத்திஃப்.
பிப்ரவரி 1999ல், மும்பையின் புறநகர் பகுதியில், மாதவ் பில்டிங் எனும் அபார்ட்மென்ட்டில், ஜாவித் ஏ சித்திக் எனும் மற்றொரு பெயரில் தனியாக ஒரு பிளாட் ஏற்பாடு செய்ய யூசுஃப் லத்திஃபிடம் உதவி கேட்டுள்ளான். அதே ஆண்டு, ஏப்ரல் மாதம் ஷங்கர் என்பவரின் உதவியுடன் யூசுஃப் மும்பை வந்து சேர்ந்தான்.
இப்ராஹீம் அத்தரின் புகைப்படங்களை கொடுத்து, யூசுப் அவனுக்காக ஒரு பாஸ்போர்ட்டை பெறுகிறான். அதன்பிறகு, சிறையை தகர்த்து, மசூத் அசாரை தப்பிக்க வைக்க தீட்டிய திட்டம் தோல்வி அடைய, பிறகு செப்டம்பர் 1999 முதல், விமான கடத்தல் திட்டத்தை வங்கதேசத்தின் டாக்கா நகரில் இருந்து தீட்டி, இறுதியில் காத்மாண்டுவில் இருந்து கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தினான்.
சிபிஐ அறிக்கையின் படி, விமான கடத்தலுக்கான பக்கா ஸ்கெட்ச்சை முடிவு செய்வதற்கு முன், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு, விமான கடத்தல் தொடர்பான விவரங்களை இப்ராஹிம் சேகரித்துள்ளான். திட்டத்தின் படி, அப்துல் லத்திஃப் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, இந்திய நாட்டின் ஆவணங்களை கொடுத்திருக்கிறான்.
இறுதியில், இப்ராஹிமும், யூசுஃப்பும் லத்திஃபை தொடர்பு கொண்டு, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்படப் போகிறது என்றும், ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது என்றும் சொல்லிவிட்டு விமானத்தை கடத்தினர்.
தற்போது, இந்திய நாட்டின் படைகளால் யூசுஃப் அசார் மற்றும் அவனது முகாம் வேரோடு அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க - பாலகோட் தாக்குதல் : இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?