பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினரை வாழ்த்தியும், சில மூத்த தலைவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தும், சிலருக்கு தட்டிக்கொடுத்தும், டிஜிட்டல் நட்புறவின் முக்கியத்துவம் குறித்து எம்.பி.க்கு அறிவுரை வழங்கியதும், எதிர்கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். சுமார் 90 நிமிடங்கள் பேசிய அவர், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பொதுவாக பட்ஜெட் உரை முடிந்த உடன் அவை ஒத்திவைக்கப்படும். அதேபோல் நேற்று அவை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் நிறைவடைந்தததும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவையை விட்டு வெளியேறும் மோடி, இந்த முறை வெளியேறவில்லை.
பட்ஜெட் தாக்கல் முடிவடைந்து அவை ஒத்திவைக்கப்பட்டதும், சமூக இடைவெளி காரணமாக இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த நிர்மலா சீதாராமன் இருக்கைக்கு அருகில் சென்ற மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில், எதிர்க்கட்சியினர் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி மோடி நடந்து சென்றார். மோடி வருவதை பார்த்ததும், ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் டிஆர்எஸ் எம்பிக்கள் இருக்கையை விட்டு வெளியேறி அவையின் மையத்திற்கு வந்து நின்றனர்.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, சீதாராமன் தனது உரையை படித்துக் கொண்டிருக்கும் போது பட்ஜெட் முன்மொழிவு குறித்து விமர்சனக் கருத்துக்களை தெரிவித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் சவுகதா ராய் ஆகியோரிடம் சென்று, மோடி நலம் விசாரித்தார். அப்போது ராய் கைகுப்பி வரவேற்ற போது, மோடி அவரது தோளில் தட்டிக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சுரேஷ் கொடிக்குனில் நோக்கி மோடி நடந்துசெல்கையில், திமுகவின் டிஆர் பாலுவை வாழ்த்தினார். அப்போது, இரண்டாவது வரிசையில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா நிற்பதைக் பார்த்ததும் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், திமுகவின் ஏ ராஜாவுடன் கைகுலுக்கி சிறிது நேரம் பேசிவிட்டு, சவுதரியை நோக்கி மோடி சென்றார்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூற்றுப்படி, கூட்டத்தொடரின் முதல் மற்றும் கடைசி நாளில் பிரதமரோ அல்லது அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களோ எதிர்க்கட்சியினர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வு நடைபெறவில்லை என தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil