குஜராத் சட்டப்பேரவையின் முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரு கட்சிகளின் சார்பிலும் மூத்த தலைவர்கள் களமிறங்கி வேட்பாளர்களுக்காக ஆதரவு கோரி வருகின்றனர்.
குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) பாஜக சார்பில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சூரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அருண் ஜெட்லி, “10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி ஊழல் மிகுந்தது. அந்த அரசாங்கம் தலைவன் இல்லாத அரசாங்கம். அலுவலகத்தில் மட்டுமே பிரதமர் இருந்தார். அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.”, என கூறினார்.
மேலும், குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி அங்குள்ள முக்கிய இந்து கோவில்களுக்கு செல்வது குறித்து பேசிய அருண் ஜெட்லி, “பாஜக தான் இந்து ஆதரவு கட்சி என மக்களுக்கு தெரியும். அப்படியிருக்கையில் யாராவது நகலை விரும்புவார்களா?”, என தெரிவித்தார்.
“பாஜக மக்களிடம் நம்பகத்தன்மையை கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் மறைய துவங்கிவிட்டது. தேர்தல் முடிவுகளே வராத நிலையில் தோல்விக்கான காரணங்களை இப்போதே காங்கிரஸ் சொல்ல துவங்கிவிட்டது”, என வாக்கு இயந்திர கோளாறு குறித்து காங்கிரஸ் எழுப்பியுள்ள புகாருக்கு அருண் ஜெட்லி பதிலளித்தார்.
பத்மாவதி திரைப்படம் குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த அருண் ஜெட்லி, “இந்த விவகாரம் சென்சார் போர்டு முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து அவர்கள் முடிவெடுக்கட்டும்.”, என கூறினார்.
இதேபோல், காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சூரத்திலும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் அகமதாபாத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.