உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தொற்று நோயை குறைக்க தேசிய ஒற்றுமை மற்றும் உலகளாவிய ஒற்றுமையுடன் சமூக ஈடுபாட்டின் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவின் வணிக தலைநகரான மும்பையில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவி 6,50,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. சின்ன சந்துகள் திறந்தவெளி சாக்கடைகள் உள்ள தாராவியில் மக்கள் குடிசை மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் வாழ்கின்றனர். தாராவியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதி ஆகும்.
மும்பையில் மார்ச் 11ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று பதிவான மூன்று வாரங்களுக்குப் பிறகு, தாராவியில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி ஏப்ரல் 1ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வெள்ளிக்கிழமை வீடியோ மூலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக இருந்தாலும் கூட, அதை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதைக் காட்டுவதற்கு உலகெங்கிலும் இருந்து பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதற்கு, இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் மெகாசிட்டி மும்பையில் அடர்த்தியான மக்கள்தொகைகொண்ட தாராவியும் எடுத்துக்காட்டுகளாக உள்ளன” என்று கெப்ரேயஸ் கூறினார்.
முன்பு மும்பை நகரத்தில் கோவிட்-19 ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவியில் ஜூன் 9-ம் தேதி கொரொனா வைரஸ் தொற்று வழக்குகளின் எண்ணிக்கை, மேலும் புதிய 9 தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர், 2,347 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் 88,000 கொரோனா வைரஸ் தொற்று வழக்குகளும் கொரோனா பாதிப்பால் 5,129 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
தேசிய ஒற்றுமை மற்றும் உலகளாவிய ஒற்றுமையுடன் இணைந்த தீவிர நடவடிக்கை மட்டுமே கோவிட்-19 தொற்றுநோயைக் வீழ்த்த முடியும் என்பதை கெப்ரேயஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தலைமையின் முக்கியத்துவம், சமூக பங்களிப்பு மற்றும் கூட்டு ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கெப்ரேயஸ், “சமூக ஈடுபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட அனைவரையும் பரிசோதித்தல், தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவற்றின் அடிப்படைகள் ஒரு பரவலான சங்கிலிகளை உடைத்து வைரஸை ஒடுக்குவதற்கு முக்கியம்” என்று கூறினார்.
இந்தியாவில் இன்று 27,114 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளதன் மூலம் கோவிட்-19 தொற்று மொத்த எண்ணிக்கை 8.2 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 22,123 பேர் உயிரிழந்தனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, உலகளவில், 12 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தொற்று வழக்குகள் உள்ளன. இந்த கொரோனா பாதிப்பால் 5,60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.