காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2024 ஆம் ஆண்டிற்கான 2 உயர் மட்ட குழுக்களை அமைந்துள்ளார். புதிய அரசியல் விவகாரக் குழுவில் ஜி-23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 2024 மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளார். இது தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அண்மையில், பிரபல தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில், பிரசாந்த் கிஷோர் காங்கிரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு காங்கிரசின் ஆஃபரை மறுத்துவிட்டார். காங்கிரசுக்கு அமைப்பு ரீதியான மாற்றம் மட்டுமே தேவை வேறு யாரும் தேவையில்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட சிந்தன் ஷிவிர் என்கிற சிந்தனை அமர்வில், 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸில் சில மாற்றங்கள் செய்ய முடிவெடுக்கப்பட்டது. உதய்பூரில் நேற்று (மே 24) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2024 ஆம் ஆண்டிற்கான 2 உயர் மட்ட குழுக்களை அமைந்துள்ளார். புதிய அரசியல் விவகாரக் குழுவில் ஜி-23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில், 2024 மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளார்.
கட்சியில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த அழைப்பை தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் மறுத்து ஒதுங்கிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பிடித்துள்ளார். யார் இந்த சுனில் கனுகோலு? தேர்தல் வியூகம் வகுப்பதில் இவருடைய அனுபவம் என்ன?
யார் இந்த சுனில் கனுகோலு
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், ஆந்திரப் பிரதேசத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கும் தேர்தல் வியூகவாதியாக திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டது சுனில் கனுகோலுவின் நிறுவனம். அதுமட்டுமல்ல, இவர் பிரசாந்த் கிஷோரின் முன்னாள் கூட்டாளி அமித் ஷாவுடன் நெருக்கமாக பணியாற்றியவர், திமுக மற்றும் அதிமுகவுக்கு ஆலோசனை வழங்கியவர்.
சமூக ஊடகங்களில் தலைக்காட்டாதவர் சுனில். இவர் பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரைப் போல இல்லை. சுனில், 2014 இல் பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பிரிந்து செல்வதற்கு முன்பு அவருடன் பணிபுரிந்தவர். இருவரின் புரொஃபைல் மட்டுமல்ல, அவர்களின் செயல் முறையும் பெரிய அளவில் வேறுபடுகிறது.
2016 இல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் “நமக்கு நாமே” பிரச்சாரத்தை வடிவமைத்ததன் மூலம் சுனில் கனுகோலு மீண்டும் அரசியல் நீரோட்டத்திற்குத் திரும்பினார்.
இந்த பிரச்சாரம் வெற்றிகரமாக அமைந்து ஸ்டாலினின் இமேஜ்ஜை உயர்த்திய போதிலும், திமுக தேர்தலில் தோல்வியடைந்தது. அதிமுக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
திமுக தோல்வி அடைந்தாலும் ஸ்டாலின் தலைவராக உருவெடுத்தார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் உயிருடன் இருந்தபோதே, நமக்கு நாமே திட்டம் பிரசாரம் மூலம் மு.க. ஸ்டாலின் தலைவராக உருவாகிவிட்டார்.
திமுகவுக்காக சுனில் கனுகோலு பனியாற்றிய காலத்தில் அவருடன் பணியாற்றிய ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், சுனிலுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் உள்ள மற்றொரு வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார். “பிரசாந்த் கிஷோரைப் போலல்லாமல், சுனில் கட்சியிலிருந்து ஒரு அணியை உருவாக்குகிறார். அந்த அணி தேர்தலுக்குப் பிறகும் அப்படியே உள்ளது.” என்று கூறினார்.
தெற்கில் தொடங்கிய சுனிலின் கனுகோலு டெல்லியில் அமித் ஷாவுடன் பிப்ரவரி 2018 வரை நெருக்கமாகப் பணியாற்றினார். 300 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகா மாநில தேர்தல்கள் உட்பட பாஜக-வுக்காக வெற்றிகரமான பிரச்சாரங்களை வடிவமைத்தார்.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, இவர் திமுக முகாமுக்குத் திரும்பினார். மாநிலத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 இடங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உதவினார்.
ஆனால், மு.க. ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியதையடுத்து, கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சுனில் திமுகவில் இருந்து பிரிந்தார். பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதை சுனில் ஏற்கவில்லை. அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோரும் சுனிலுடன் பணியாற்ற ஒப்புக்கொள்ளமாட்டார் என்று திமுக உணர்ந்திருந்தது.
பின்னர் சுனில், அதிமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் குறித்தும் மாறி மாறி அறிவுரை கூறியும் அதிமுகவின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. சுனில் தற்போதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கனுகோலுவை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், திமுகவுடனான அவருடைய உறவு பெரிதாக இல்லை. பேச்சுவார்த்தைகூட இல்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் சுனில் கனுகோலுவை சந்தித்த அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இறுதியில், சுனில் கனுகோலுவின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்திற்கு கர்நாடக பிரச்சாரத்திற்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் கொடுத்தது.
காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சியில், பல்வேறு இழுப்புகளும் அழுத்தங்களும் இருக்கும். செயல்படும் முறையும் வேறுபட்டது. வெளியாட்கள், அவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தாலும், அவரது கருத்துக்களை திணிக்க முயற்சி செய்தால், அது மோதலுக்கு வழிவகுக்கும். உத்தரபிரதேசத்தில் பணியாற்றியபோது பிரசாந்த் கிஷோருக்கும் அதுதான் நடந்தது என்று கூறுகின்றனர்.
ஆனால், சுனில் கானுகோலு தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பல மொழிகளைப் பேசுபவர் என்பதால் அவருக்குப் பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர். முக்கியமாக, சுனில் தென்னிந்தியாவின் அரசியலையும் உள்ளுணர்வையும் நன்கு புரிந்துகொண்டவர். வட இந்தியாவின் நாடித் துடிப்பையும் அறிந்தவர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் இடம்பிடித்துள்ள தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு தனது மைண்ட்சேர் அனலிட்டிக்ஸ் குழுவுடன் காங்கிரசுக்காக களம் இறங்குகிறார். அவருடைய மைண்ட்சேர் அனலிட்டிக்ஸ் குழுவில் உள்ளவர்கள், பப்ளிக் பாலிசி, சட்டம் போன்ற துறைகளில் வல்லுநர்கள், சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சி, பிரச்சாரம், சமூக ஊடகங்கள், புள்ளிவிவரங்கள், பகுப்பாய்வு மற்றும் பல துறைகளில் பணிபுரியும் ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற பல்கலைக்கழகங்களில் பட்டதாரிகள் என்பது அவருடைய பலமாக இருக்கிறது.
காங்கிரசின் அழைப்பை பிரசாந்த் கிஷோர் மறுத்த நிலையில், அவருடைய முன்னாள் கூட்டாளி சுனில் கனுகோலு கைப்பற்றி இருக்கிறார். சுனில் கனுகோலு 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வாரா என்பதே இப்போது தேசிய அரசியல் களத்தில் எழுந்துள்ள கேள்வியும் எதிர்பார்ப்புமாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“