ஆர். சந்திரன்
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 11,300 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் கதாநாயகன் - குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சேர்ந்த 46 வயது வைர வியாபாரியான நிரவ் மோடி. ஃபயர் ஸ்டார் என்ற பெயரில் பிரபலமான வைர நகை நடத்தி வந்த நிரவ் மோடிக்கு, தலைநகர் டெல்லியில் சாணக்கியபுரி மற்றும் டிஃபன்ஸ் காலனியில் மட்டுமின்றி, மும்பை, சூரத் போன்ற ஊர்களிலும் வைர நகை விற்பனை நிலையங்கள் உள்ளன.
மும்பை திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலர் இவரது வாடிக்கையாளர் என்பதுடன், நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்கள் இவரது நகைக்கடையின் விளம்பர தூதர்களாக காட்சி தந்திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற பல நாடுகளிலும், குறிப்பாக லண்டன், நியூயார்க், லாஸ் வாகஸ் ஹவாய் தீவுகள், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் நிரவ் மோடிக்கு நகைக்கடைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை நகரத்தின் குர்லா பகுதியில் உள்ள பெரிய பங்களாவில்தான் நிரவ் மோடி வசித்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் நிரவ் மோடி முன்னணி அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்துள்ளார்.
அண்மையில் தாவோஸ் நகரத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது, அங்கே நிரவ் மோடி, பிரதமர் மோடியைச் சந்தித்தார் எனவும், இருவரையும் ஒன்றாக காணமுடிந்தது எனவும் சொல்லப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். நிரவ் மோடிக்குத் தொடர்புள்ள 9 இடங்களிலும், அவரது உறவினர்கள் சகாக்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புடையவை என மொத்தம் 13 இடங்களிலும் தற்போது மத்திய அரசின் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்துவதுடன் விசாரணையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு 2017லேயே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் இவரும் குற்றவாளி என்ற புகாரின்பேரில் விசாரணை நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில், நிரவ் கடந்த மாதமும் கூட இந்த வங்கியில் இருந்து, போதுமான பிணை, உரிய ஆவணங்கள் இன்றி கடன்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.