உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும் இந்தியாவின் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இரண்டு இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு நேற்று (புதன்கிழமை) அறிவித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த அம்ப்ரோனால் (Ambronol) மற்றும் DOK-1 மேக்ஸ் (DOK-1 Max) என்ற இருமல் மருந்துகளை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 19 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பரபரப்பு குற்றஞ்சாட்டியது. உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில், அம்ப்ரோனால் மற்றும் DOK-1 மேக்ஸ் சிரப் மருந்துகளில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் அதிகளவில் இருப்பதாக குற்றஞ்சாட்டியது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் அளவில் இருந்து எத்திலீன் கிளைகோல் இம்மருந்துகளில் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
குற்றச்சாட்டையடுத்து, இந்திய அரசு உடனடியாக மரியன் பயோடெக் நிறுவனத்தின் மருந்து தயாரிப்புகளை நிறுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மரியன் பயோடெக் நிறுவன மருந்துகள் பாதுகாப்பானது மற்றும் தரமானது என்பது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து உத்தரப் பிரதேச அரசு அந்நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் அரசு குழந்தைகள் மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்டதில் கடந்த வாரம் 4 நபர்களை கைது செய்தது. மேலும், உலக சுகாதார அமைப்பும் அம்ப்ரோனால் (Ambronol) மற்றும் DOK-1 மேக்ஸ் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோன்று இந்திய இருமல் மற்றும் சளி மருந்துகளால் காம்பியா நாட்டில் 70 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. டெல்லியை சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 வகையான இருமல் மற்றும் சளி மருந்துகளை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் நிறுவனம் இக்குற்றச்சாட்டை மறுத்தது. மருந்துகளில் தவறு ஏதும் இல்லை என்று கூறியது. மேலும், இந்திய அரசு அம்மருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலும் தவறு ஏதும் கண்டறியவில்லை எனக் கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/