இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களில் உள்ள முக்கிய குற்றச்சாட்டுகளை விவரிக்கும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையைப் பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி, “இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வியெழுப்பி உள்ளார்.
இது குறித்து ட்விட்டரில், “நரேந்திர மோடி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார்.
இதற்கிடையில், அதே அறிக்கையை மேற்கோள் காட்டி, சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்பி பிரியங்கா சதுர்வேதி, “பிரிஜ் பூஷண் சரண் சிங்கை ஏன் அரசாங்கம் மற்றும் பாஜக பாதுகாக்கிறது“ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இதுதொடர்பான ட்வீட்டில் சதுர்வேதி, “தேசத்தின் பிரதமர் இந்த மனிதரை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அமைதியாக இருக்கிறார். தேசத்தின் விளையாட்டு அமைச்சர் இவரைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொள்கிறார்.
இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர். இவரை ஏன் அரசும் பாஜகவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில் இருக்கிறதா?" எனக் கேட்டுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விவரித்தது. அதில் அவர் பெண்களிடம் எப்படி தவறாக நடந்தார் என புகாரில் உள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, 354, 354A (பாலியல் துன்புறுத்தல்), 354D (பின்தொடர்தல்) மற்றும் 34 (பொது நோக்கம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“