மகாராஷ்டிராவில் தற்போதைய மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஒரு நாள் கழித்து, சிவசேனா (யு.பி.டி) தலைவர் சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார். இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மாநில அரசியலில் இருந்து விலகியவர்களிடம் இருந்து சட்டத்தின் பயத்தை அகற்றவில்லை. எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான மனுக்கள் மீதான முடிவு தேர்தலில் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) தோல்விக்கு வழிவகுத்தது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Decode Politics: Why Sanjay Raut is blaming ex-CJI Chandrachud for MVA’s poll debacle
எம்.வி.ஏ கூட்டணியின் முக்கிய அங்கமான சிவ சேனாவும் (யு.பி.டி) அதன் மற்ற கூட்டணி கட்சிகளைப் போலவே தோல்வியை எதிர்கொண்டது. ஏனெனில், அக்கட்சி போட்டியிட்ட 94 இடங்களில் 20 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
ஜூன் 2022-ல் உத்தவ் தாக்கரேவின் தலைமைக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே பிரிவு எம்.எல்.ஏ-க்களின் அதிருப்தியை அடுத்து, சிவ சேனாவை பிளவுபடுத்தி, அப்போதைய உத்தவ் தலைமையிலான எம்.வி.ஏ அரசாங்கத்தை கவிழ்த்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாயுதி அரசாங்கம் அமைக்க வழிவகுத்தது. ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உத்தவ் அணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், அதிருப்தி சிவ சேனா பிரிவு எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட்டது. ஜனவரி 2024-ல், சபாநாயகர் ராகுல் நர்வேகர் தனது தீர்ப்பை வழங்கினார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை "உண்மையான சிவசேனா" எனக் கூறி, சிவ சேனா கட்சியின் மீதான அவரது உரிமைகோரலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தார்.
தகுதி நீக்க வழக்கை சபாநாயகர் முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியது ஏன்?
மே 11, 2023-ல் அப்போதைய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சிவ சேனா பிளவு வழக்கு தொடர்பான பல்வேறு விவகாரங்களில் ஒருமனதாக தீர்ப்பளித்தது. முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டசபையின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்ற முடிவுக்கு அன்றைய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறிய போதிலும், உத்தவ் அரசை மீண்டும் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. உத்தவ் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவில்லை என்றும், முதல்வர் தானாக முன்வந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததால் அவரது ராஜினாமாவை ரத்து செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு விவகாரத்தில் தீர்ப்பளிக்க "அசாதாரண சூழ்நிலைகள் எதுவும் இல்லை" என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து, சபாநாயகருக்குதான் அதை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.
2023 அக்டோபரில், தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக நர்வேக்கரைக் கண்டித்து, அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மற்றொரு உச்ச நீ்திமன்ற அமர்வு, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அதைத் தீர்மானிக்கும்படி கேட்டுக் கொண்டது, இதற்கான கால அவகாசம் ஜனவரி 10, 2024 வரை நீட்டிக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே பிரிவை "உண்மையான சிவ சேனா" என்று அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் தாக்கத்திற்கு ஆளாகாமல் முடிவெடுக்குமாறு நர்வேக்கரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்ன?
பிப்ரவரி 17, 2023-ல், தேர்தல் ஆணையம் ஷிண்டே பிரிவை "உண்மையான சிவ சேனா" என்று அறிவித்து, பிரிக்கப்படாத கட்சியின் பெயரையும் "வில் அம்பு" சின்னத்தையும் ஒதுக்கியது. உத்தவ் பிரிவு இடைக்காலக் கட்சிப் பெயரான சிவசேனா-யு.பி.டி-யையும் தேர்தல் சின்னமாக "சுடர்விடும் ஜோதி"யையும் வைத்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உத்தவ் அணி உச்சநீதிமன்றத்தை அணுகியது. அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
பிப்ரவரி 6, 2024-ல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) நிறுவனர் சரத் பவாருக்கு ஏற்பட்ட பின்னடைவில், தேர்தல் ஆணையம் அஜித் பவார் பிரிவை "உண்மையான என்.சி.பி" என்று அங்கீகரித்து, பிரிக்கப்படாத கட்சியின் பெயரையும் அதன் "கடிகாரம்" சின்னத்தையும் ஒதுக்கியது.
சரத் பவார் அணிக்கு என்.சி.பி (எஸ்.பி) என்ற பெயரும், "துர்ஹா ஊதும் மனிதன்" (ஒரு பாரம்பரிய எக்காளம் ஊதும் மனிதன்) என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டது.
அதிருப்தியை எழுப்பி, அஜித் பவார் அணி 2023 ஜூலை தொடக்கத்தில் மஹாயுதி முகாமுக்குச் சென்றது, அதைத் தொடர்ந்து அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தில் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
தகுதி நீக்க வழக்குகளில் சபாநாயகர் மூடிவு என்ன?
ஜனவரி 10, 2024-ல், சபாநாயகர் நர்வேகர், ஏக்நாத் ஷிண்டே பிரிவுதான் "உண்மையான சிவ சேனா" என்று அறிவித்தார். ஜூன் 21, 2022-ல் போட்டி சிவ சேனா பிரிவுகள் உருவானபோது இருந்த சட்டமன்ற பெரும்பான்மையின் அடிப்படையில் இது "தெரிந்துகொள்ளக்கூடியது" என்று அவர் கூறினார். பிரிக்கப்படாத சிவ சேனாவின் 55 எம்.எல்.ஏ-க்களில் ஏக்நாத் ஷிண்டே அணியில் 37 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்.
இரு தரப்பையும் சேர்ந்த 54 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சிவசேனா அணிகள் தாக்கல் செய்த 34 மனுக்களையும் சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.
பிப்ரவரி 15, 2024-ல், என்.சி.பி அணிகள் ஒருவருக்கொருவர் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் மீது முடிவெடுத்த, அஜித் பவார் பிரிவுதான் "உண்மையான என்.சி.பி" என்று நர்வேகர் அறிவித்தார்.
அஜித் பவார் அணியைச் சேர்ந்த 41 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சரத் பவார் அணியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி போட்டி என்.சி.பி பிரிவுகள் தாக்கல் செய்த மனுக்களையும் சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.
உத்தவ் சிவ சேனா மற்றும் சரத் பவார் என்.சி.பி-யின் பதில் என்ன?
சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சிவ சேனா (யு.பி.டி) மற்றும் என்.சி.பி (எஸ்.பி) ஆகிய கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
ஷிண்டே கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வருவதைத் தடுக்கவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவர்களின் உறுப்பினர் பதவியை இடைநிறுத்தவும் சபாநாயகரின் உத்தரவுக்கு சிவ சேனா (யு.பி.டி) தடை கோரியது. அதன் மனுவில், சிவ சேனா (யு.பி.டி) எம்.எல்.ஏ-க்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பிரிவின் கொறடாவுக்கு எதிராக தடை உத்தரவைக் கோரியது.
சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன, மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி கடைசியாக விசாரணைக்கு வந்தது. சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் கட்சிகள் தங்கள் சமர்ப்பிப்புகளின் பொதுவான தொகுப்பை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இருப்பினும், புதிய சட்டமன்றத் தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இந்த மனுக்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை.
நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்து நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெற்றார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கல் செய்த மனு, கடந்த செப்டம்பர் 18, 2023-ல் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் மற்றும் சபாநாயகர் உத்தரவுகளை எதிர்த்து என்.சி.பி (எஸ்.பி) தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.