ராஜஸ்தானில் பில் பழங்குடியினரின் தனி மாநில கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி பில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான பன்ஸ்வாராவில் உள்ள மன்கர் தாமில் மாநாடு ஒன்றை நடத்தினர். அதில், நான்கு மாநிலங்களில் இருந்து 49 மாவட்டங்களை பிரித்து "பில் பிரதேசம்" என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
பில் பிரதேசத்திற்கான கோரிக்கை பல ஆண்டுகளாக பழங்குடித் தலைவர்களால் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு பாரதிய பழங்குடியினர் கட்சியின் (பி.டி.பி) பிரிந்து உருவாக்கப்பட்ட பாரத் ஆதிவாசி கட்சி (பி.ஏ.பி) அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கணிசமாக வாக்குகளைப் பெற்றது. மேலும், ஒரு எம்.பி-யையும் பெற்றது. இது அந்த சமூக மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Decode Politics: Why the tribal demand for ‘Bhil Pradesh’ has returned to haunt Rajasthan politics
பி.ஏ.பி கட்சி சார்பில் பன்ஸ்வாரா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ராஜ்குமார் ரோட் முதல் முறையாக எம்.பி.யாக வெற்றி பெற்றார். முன்னதாக, பி.ஏ.பி கட்சி அதன் மக்களவை தேர்தல் அறிக்கையில் பில் பிரதேசத்திற்கான கோரிக்கையை உள்ளடக்கி இருந்தது. மேலும், தேர்தலுக்குப் பிறகு கட்சி அதன் மீது கவனம் செலுத்தும் என்று கூறியது. பன்ஸ்வாராவின் மங்கர் தாமில் நடந்த பில் சமூக மக்கள் மாநாட்டிற்கும் ராஜ்குமார் ரோட் தான் அழைப்பு விடுத்திருந்தார்.
‘பில் பிரதேஷ்’-க்கான கோரிக்கை என்ன?
பாரத் ஆதிவாசி கட்சி (பி.ஏ.பி) அறிக்கையின்படி, உத்தேச பில் பிரதேசமானது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு தொடர்ச்சியான மாநிலங்களில் 49 மாவட்டங்களை உள்ளடக்கும். இதில் ராஜஸ்தானில் இருந்து 12 மாவட்டங்கள் அடங்கும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 1.7 கோடி பில் சமூக மக்கள் உள்ளனர். அவர்களில் அதிக மக்கள் மத்திய பிரதேசத்தில் சுமார் 60 லட்சம், குஜராத்தில் 42 லட்சம், ராஜஸ்தானில் 41 லட்சம் மற்றும் மகாராஷ்டிராவில் 26 லட்சம் என வசிக்கிறார்கள்.
தனி பில் பிரதேசத்தின் அவசியம் குறித்து கேட்டபோது, புவியியல், கலாச்சாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் இந்த கோரிக்கை இருப்பதாக ராஜ்குமார் ரோட் எம்.பி தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசுகையில், “துங்கர்பூர் அல்லது நாசிக்கில் உள்ளவர்களிடம் நீங்கள் பேசினால், நாங்கள் அனைவரும் பிலி மொழியைப் பேசுகிறோம், அதேபோன்ற கலாச்சாரத்தையும் கொண்டுள்ளோம் என்பார்கள்.
ஒரே மாதிரியான கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை செதுக்க முடியும் என்றால், ஏன் பில் பிரதேசம் கூடாது? மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம் பில் சமூக மக்ககளுக்கு மட்டும்தான் என்று கூறுவது சரியல்ல. ஜூலை 18 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ராஜ்புத், பட்டியலிடப்பட்ட சாதி, பழங்குடி மற்றும் முஸ்லீம் சமூகத் தலைவர்கள் எங்கள் கோரிக்கையை ஆதரித்தனர், ”என்று ராஜ்குமார் ரோட் எம்.பி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
‘பில் பிரதேசம்’ கோரிக்கையின் வரலாறு என்ன?
எம்.பி ராஜ்குமார் ரோட் மற்றும் பிற பி.ஏ.பி கட்சி தலைவர்களின் கூற்றுப்படி, பில் பிரதேசத்திற்கான கோரிக்கை 1913 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறது. பழங்குடி ஆர்வலரும் சமூக சீர்திருத்தவாதியுமான கோவிந்த் கிரி பஞ்சாரா, 1913 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான மாங்கர் மலையில் பழங்குடியினரைத் திரட்டியபோது பில் மாநிலத்தை முதன்முதலில் கோரினார் என்று பி.டி.பி தலைவர்கள் கூறுகின்றனர். நவம்பர் 17, 1913 இல், சுமார் 1,500 பழங்குடியினர் தங்கள் கிளர்ச்சிக்காக ஆங்கிலேயர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
எம்.பி ராஜ்குமார் ரோட் தனது கட்சி தங்கள் முன்னோர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகக் கூறினார். “கோவிந்த்ஜி மகராஜ் தனி பில் மாநிலத்தை கோரினார். இதனால் நீண்ட காலமாக நடந்து வரும் பழங்குடியினர் மீதான சுரண்டல் முடிவுக்கு வரும். பிரிட்டிஷ் அரசாங்கம் 1900 களில் ஒரு தனி பில் மாநிலத்திற்கான வரைபடத்தை கூட உருவாக்கியது, இது புதிதாக உருவாக்கப்பட்ட கோரிக்கை அல்ல, ஆனால் நாங்கள் எங்கள் இருப்புக்காக போராடுகிறோம் என்பதற்கு சான்றாகும், ”என்று அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக, பல்வேறு பழங்குடித் தலைவர்கள் தனி பில் மாநிலம் கோரி குரல் கொடுத்துள்ளனர். அப்போது வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சரான நந்த் லால் மீனா, பழங்குடியின சமூகத்தினருக்கென தனி மாநிலம் கோரியதோடு, பல முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், நந்த் லால் மீனா உட்பட பலர், சமீபத்திய ஆண்டுகளில் இந்த பிரச்சினையில் தங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளனர்.
பழங்குடியினப் பகுதிகளில் வலுவான இருப்பைக் கொண்டிருப்பதால், பில் பிரதேச கோரிக்கையை காங்கிரஸ் எப்போதும் ஆதரிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், பி.டி.பி மற்றும் பி.ஏ.பி கட்சியின் எழுச்சிக்குப் பிறகு, காங்கிரஸ் இந்த பிரச்சினையில் பின்வாங்கியுள்ளது. இப்போது அது பற்றி குரல் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானில் கோரிக்கை எந்த அளவுக்கு எதிரொலிக்கிறது?
கடந்த வியாழன் அன்று ராஜஸ்தான் சட்டசபையில் தனி பில் மாநில கோரிக்கை எழுப்பப்பட்டது. தரியாவாத் தொகுதியின் பி.ஏ.பி கட்சி எம்.எல்.ஏ தவர்சந்த் மீனா, “இன்று நான் சபையில் பேசும்போது, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் பழங்குடியினர் மன்கர் தாமில் நடைபெறும் மகா சம்மேளனத்தில் கலந்து கொள்கிறார்கள். பழங்குடியினராகிய நாங்கள் குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் எனப் பிரிக்கப்பட்டுள்ளோம். எங்கள் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஒரே மாதிரியானவை, பிறகு நாம் ஏன் ஒரு பில் மாநிலத்தை உருவாக்க முடியாது?
பி.ஏ.பி தலைவர்கள் தங்களை இந்துக்களாகக் கருதவில்லை என்றும் கூறியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, மாநிலக் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பழங்குடியினத் தலைவர்கள் தங்களை இந்துக்களாகக் கருதவில்லை என்றால், டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பி.ஏ.பி தலைவர்களின் எதிர்ப்புக்குப் பிறகு திலாவர் பின்னர் சட்டமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பி.ஏ.பி எம்.எல்.ஏ-க்கள் இருவரும் ‘பில் பிரதேஷ்’ டி-சர்ட் அணிந்திருந்தனர்.
சிரோஹி மாவட்டத்தின் பிந்த்வாரா-அபு தொகுதியின் பா.ஜ.க பழங்குடி எம்.எல்.ஏ சமரம் கராசியா, தங்களை இந்துக்களாகக் கருதாத பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு உரிமை இல்லை என்று கூறினார். பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் இல்லை என்றால், இட ஒதுக்கீட்டை ஏன் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படிப்பட்டவர்கள் பழங்குடியினப் பகுதிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியற்றவர்கள். ஒரு சமூகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்,'' என்றார்.
பில் பிரதேசம் பிரச்சினை எப்படி இருக்கும்?
ஜூலை 18 அன்று, எம்.பி ராஜ்குமார் ரோட் மற்றும் பிற பி.ஏ.பி கட்சித் தலைவர்கள் தங்கள் தனி மாநில கோரிக்கை விரைவில் நிறைவேறாது என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர், ஆனால் அவர்கள் இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தங்கள் போராட்டத்தைத் தொடர உள்ளார்கள்.
இருப்பினும், மற்றொரு பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான துங்கர்பூரைச் சேர்ந்த ஒரு சர்பஞ்ச், பில் பிரதேசத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாது, குறிப்பாக நான்கு மாநிலங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். “பி.ஏ.பி பழங்குடியின இளைஞர்களிடையே பில் பிரதேசத்தின் விஷயத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பி.ஏ.பி கட்சியில் உள்ள அனைவரும் இந்த கனவு நிறைவேறாது என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இந்த பகுதிகள் பெரும்பாலும் பழங்குடியினர் என்பதால் பழங்குடி அரசியலில் தொடர்புடையதாக இருக்க பி.ஏ.பி தலைவர்கள் அதை செய்திகளில் வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த மாநிலங்களில் வரும் தேர்தலில் வெற்றி பெற இயன்றவரை பிரச்சினையை நீட்டிக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவு. இந்தப் பிரச்சினையை அவர்கள் எந்தளவுக்கு தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.