மக்களை பாதுகாக்கும் வகையிலும், பயனர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஒழுங்குபடுத்தும் என அமைச்சர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு டிஜிட்டல் துறையில் செய்த சாதனைகளை குறித்து மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அடுத்த சில ஆண்டுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை.
காரணம், ஏ.ஐ தொழில்நுட்பம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அது கொடுத்த வேலைகளை மட்டும் செய்யும். பகுத்தறியும் தன்மை இல்லை. பகுத்தறியும் தன்மையும் பணிகளுக்கு அடிப்படை. அத்தகைய மேம்பட்ட தன்மையுடன் தற்போதைய செயற்கை நுண்ணறிவு இல்லை. வெப் 3 போன்ற தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தத் தேவையான ஒழுங்குமுறைகளை அரசு ஏற்படுத்தும்.
அதேபோல் ஆன்லைன் கேமிங்கை ஒழுங்குபடுத்தவதும் மத்திய அரசு விதிகளை விரைவில் வகுக்கும். தீங்கு, அடிமையாதல், பந்தயம் ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் விதிகள் வகுக்கப்படும் என்றார்.
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறை ஒரு கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், ஏ.ஐ தொழில்நுட்பம் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சில துறைகளில் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை மாற்றத் தொடங்கும் அளவுக்கு அறிவார்ந்ததாக மாறும். 5-10 ஆண்டுகளில் சாத்தியம். ஆனால் இன்றைய நிலையில் ஏ.ஐ கட்டளைகளை மட்டுமே செய்கிறது. இது வரும் ஆண்டுகளில் வேலைகளை மாற்றக்கூடும் என்றார்.
ஏ.ஐகளுக்கு விதிமுறைகள் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சந்திரசேகர், "சாட் ஜி.பி.டியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ நிறுவன சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் இருந்தார். ஏ.ஐ முக்கிய நபர்கள் இந்தியாவுடன் கூட்டு சேர விரும்புவது நல்லது. இருப்பினும், ஏ,ஐக்கு விதிமுறைகள் வகுக்கப்படும். பயனர்களுக்கு தீங்கு விளைக்கும் வகையில் உள்ளவற்றை ஒழுங்குபடுத்துவோம்.
டிஜிட்டல் நாகரிகத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் 2014ல் இருந்து எங்களின் தத்துவம். அந்த இயங்குதளங்கள் இந்த நாட்டில் உள்ள டிஜிட்டல் பயனருக்கு தீங்கு விளைவிக்க விடமாட்டோம் ஏ.ஐ ஒழுங்குமுறைக்கான எங்கள் அணுகுமுறை மிகவும் எளிமையானது. வெப் 3 அல்லது ஏதேனும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை நாங்கள் ஒழுங்குபடுத்தும்போது ஏ.ஐயையும் ஒழுங்குபடுத்துவோம். மக்களை பாதுகாக்கவும், தீங்கு விளைவிக்காத வகையிலும் தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்"என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.