பாஜகவுக்கு அடிபணிவதைவிட மகிழ்ச்சியாக உயிரை விடுவேன் - லாலு பிரசாத் ஆவேசம்!

பாரதீய ஜனதாவின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பதை விட, சமூக நீதிக்காக, நல்லிணக்கத்துக்காக, சமத்துவத்துக்காக மகிழ்ச்சியாக சாவேன்

பீகார் முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் இருந்த 1991-1994 காலகட்டத்தில் அரசு கால்நடைப் பண்ணைகளுக்கு மாட்டுத் தீவனம் வாங்கியதில் அரசு கஜானாவுக்கு 89 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. மேலும், சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் லாலுபிரசாத் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், நேற்று(ஜன.,6) தண்டனை விவரங்களை ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது. லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் சக குற்றவாளிகள் பஹூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜாராமுக்கு தலா 3.5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி ஜெகதீஷ் ஷர்மாவுக்கு 7 வருடம் சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக லாலுவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இவர்கள் யாருமே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய முடியாது. ஹைகோர்ட்டில் தான் ஜாமீனுக்கு அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தண்டனை குறித்து லாலு பிரசாத் யாதவ் தனது ட்விட்டரில், ““எங்களைப் பின்பற்றி வாருங்கள் இல்லையேல் உங்களை குறி வைப்போம் என்ற பாரதீய ஜனதாவின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பதை விட, சமூக நீதிக்காக, நல்லிணக்கத்துக்காக, சமத்துவத்துக்காக என்னை நான் குறிவைத்துக் கொண்டு, மகிழ்ச்சியாக சாவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

×Close
×Close