காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தி பற்றி சமூக தளங்களில் ஆபாசமாக கருத்துகள் பதிவிட்டதாக கூறி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யோகி சஞ்சய்நாத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியை உத்தர பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக நியமித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரவலாக வரவேற்பு கிடைத்தது.
'தேர்தலில், ராகுலை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் உணர்ந்ததால் தான் பிரியங்காவுக்கு நேரடியாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது' என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், பிரியங்கா காந்தி குறித்து ட்விட்டர் உட்பட சமூக தளங்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யோகி சஞ்சய்நாத் என்பவர் ஆபாசமாக கருத்துகள் பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவரைப் போன்று பலரும் பிரியங்கா குறித்து ஆபாசமாக கருத்துகள் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகாரளிக்க, சஞ்சய்நாத் மீது பீகார் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், பிரியங்கா காந்தி மீதான சமூக வலைத்தள தாக்குதல் குறித்து, அனைத்திந்திய மகிளா காங்கிரஸ் சார்பில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.