மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அண்மையில் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது. இது தொடர்பாக நான் அமித் ஷா உடன் டெலிபோனில் பேசினேன் என்பது நிரூபிக்கப்பட்டால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநில தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை புதன்கிழமை (ஏப்.19) சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார். தொடர்ந்து, “தமது கட்சி்யின் பெயர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி” என்றே இருக்கும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி, “தேர்தல் ஆணையம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அந்தஸ்தை திரும்ப பெற்ற நிலையில் மம்தா பானர்ஜி அமித் ஷா உடன் பேசியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மம்தா பானர்ஜி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “10 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் தேசியக் கட்சி நிலையை மறுபரிசீலனை செய்வது வழக்கமாக இருந்தது. அதாவது அடுத்த மதிப்பாய்வு 2026 இல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை 2019 இல் செய்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமின்றி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேசிய அங்கீகாரத்தை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“