இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிரான போராடி வரும் மல்யுத்த வீரர்கள் தங்களது பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளை புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 15-ந் தேதிக்குள் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் உறுதியளித்ததை தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். அதேநேரத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புகார் அளித்த 18 வயது வீராங்கனையின் தந்தை தாங்கள் பொய்யாக புகார் அளித்தாக வாபஸ’ பெற்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று அரியானா மாநிலம் சோனிபட்டில் நடந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் காப்ஸ், விவசாயிகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் கூறுகையில், நாட்டின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிராக தங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டால் மட்டும் தான் நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போம். ஒவ்வொரு நாளும் நாங்கள் மனதளவில் என்ன செய்கிறோம் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, ”என்று சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. மல்யுத்த வீரர்கள் போட்டியில் இருந்து விலகினால், அது இந்தியாவுக்கு பெரிய அடியாக இருக்கும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகிய இருவரும் கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்கள்.
ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், போராட்டத்தின் முக்கிய வீரர்களில் ஒருவருமான பஜ்ரங், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தங்களது போராட்டம் பரபரப்பை ஏற்படுத்துவதில் எந்த அரசியலும் இல்லை. நாங்கள் நடத்திய விவாதத்தை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பஞ்சாயத்தை அழைத்தோம். ஜூன் 15-ம் தேதிக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மல்யுத்த வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது வினேஷ் போகட் விவாதத்தில் பங்கேற்கவில்லை, மேலும் அவர் நேற்று நடைபெற்ற மகா பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கும் வரவில்லை. “வினேஷ்க்கு உடல்நிலை சரியில்லை, அதனால் அவரால் வர முடியவில்லை என்று பஜ்ரங் தெரிவித்துள்ளார். அதேபோல் வினேஷ் சட்டச் சிக்கல்கள் தொடர்பான நடவடிக்கைகளில் இருக்கிறார். நிறைய வேலை இருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு (வியாழன்) நடந்தமல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நேர்மறையானதாக இருந்தது என்றும் அவர்கள் தரப்பில் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் தீவிரமாக விவாதிக்கப்பட்டன என்றும் கூறியுள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஜூன் 15-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், ஜூன் 30-ம் தேதிக்குள் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.