மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதிலிருந்தே இந்தியா முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. வடகிழக்கில் தொடங்கிய போராட்டங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கின. ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவல்துறையின் செயல்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
Advertisment
திரைத் துறை, கலைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு குந்தகம் விளைத்தவர்கள் மீது தங்கள் அரசாங்கம் 'பழிவாங்கும்' நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறினார். லக்னோ மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து அவர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "லக்னோ மற்றும் சம்பலில் வன்முறை ஏற்பட்டது, நாங்கள் இதனை கண்டிப்பாக கையாள்வோம். பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இழப்புகளை ஈடுசெய்ய ஏலம் விடப்படும். வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்கள் மீது ‘பட்லா’ (பழிவாங்கல்) எடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒரு ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. CAA ஐ எதிர்ப்பது என்ற பெயரில், காங்கிரஸ், SP மற்றும் இடது கட்சிகள் முழு நாட்டையும் போராட்டத்திற்கு தூண்டிவிட்டுள்ளன" என்று குற்றம் சாட்டியுள்ளார்.