மாபெரும் ஆவலுக்கு மத்தியில், நேற்று இரவு, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானிடமிருந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபிநந்தன் வர்த்தமான்…. கடந்த மூன்று நாட்களாக ஒட்டுமொத்த இந்தியாவும் உச்சரித்த பெயர் இது. கடந்த 27ம் தேதி எல்லைத் தாண்டி அத்துமீறிய பாகிஸ்தானின் போர் விமானங்களை, இந்திய MiG-21 ரக போர் விமானத்தில் துரத்திச் சென்றவர் விங் கமாண்டர் அபிநந்தன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எதிரிகளால் அவரது விமானம் சுடப்பட, தன்னை எஜெக்ட் (Eject) செய்து கொண்ட அபிநந்தன், பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கினார். ஆனால், அவர் கால் பதித்தது பாகிஸ்தான் மண்ணில்.
இதுதொடர்பான வீடியோக்கள், சமூக ஊடகங்களில் வைரலாக பரவ, ‘போர் விமானத்தில் சென்ற வீரர் திரும்பி வரவில்லை’ என்று அறிவித்தது இந்தியா. இதன்பிறகு, தொடர்ந்து பாகிஸ்தானில் அவர் இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்க, பாகிஸ்தானிற்கு உலகளவில் நெருக்கடி முற்றியது.
இதைத் தொடர்ந்து, ‘அமைதியை நிலைநாட்டும் பொருட்டு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்’ என பாக்., பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் அறிவித்தார்.
அதன்படி, நேற்று இரவு 9.20 மணியளவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ், அபி நந்தனை இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் (BSF) ஒப்படைத்தனர். குரூப் கேப்டன் ஜே டி குரியன், இந்திய உயர் ஆணையத்தின் ஏர் அட்வைஸர், மற்றும் ஃபரீஹா பக்டி, (இந்தியா), பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக இயக்குனர் ஆகியோர், இந்த ஒப்படைப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்பிறகு, தயாரிக்கப்பட்ட அறிக்கையை வாசித்த விமானப்படை துணை மார்ஷல் ஆர் ஜி கே கபூர், “இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த மருத்துவ பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில், விமானத்தில் இருந்து விமானி தன்னை வெளியேற்றிய போது, அவரது உடல் முழுவதும் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கும். அபிநந்தன் திரும்ப கிடைத்திருப்பது இந்திய விமானப்படைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அம்ரிட்ஸர் துணை ஆணையர் ஷிவ்துலார் சிங் தில்லான் இதே கருத்தை பிரதிபலித்தார். “விமானி மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
பிரதமர் மோடி, “வெல்கம் ஹோம், விங் கமாண்டர் அபிநந்தன்! உங்களது முன்மாதிரியான வீரத்தைக் கண்டு இந்த நாடே பெருமை கொள்கிறது. நம்முடைய ஆயுதப்படை, 130 கோடி இந்தியர்களுக்கும் உத்வேகம் தருகின்றன. வந்தே மாதரம்!” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, அபிநந்தன் இந்திய வீரர்களிடம் ஒப்படைப்பதில் திடீரென்று தாமதம் ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து, லாஹூரில் இருந்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், இந்திய வீரரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அவர் எல்லையை கடப்பதற்கு முன்பாக, பாகிஸ்தான் அதிகாரிகள் அவரின் வீடியோ வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டனர். அந்த வீடியோவை பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.