பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாடு முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனங்களை பாஜக தலைமை செய்து வருகிறது. அவ்வகையில், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலத்துக்கு புதிய தலைவர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைவராக சதிஷ் பூனியா மற்றும் பீகார் மாநில தலைவராக சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது முதல் கருத்துகளை வெளியிட்ட ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட சதிஷ் பூனியா, ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்துஸ்தான் இருந்திருக்காது என்று கூறியுள்ளார்.
ஜாட் தலைவரான பூனியா, அனைத்து சாதிகளையும் சமூகங்களையும் அழைத்துச் செல்வது தனது முன்னுரிமையாக இருக்கும் என்று கூறினார்.
அவரது ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்து கேட்டபோது, "ஆர்.எஸ்.எஸ் இல்லை என்றால், இந்துஸ்தான் இருந்திருக்காது. ஆர்.எஸ்.எஸ் இவ்வளவு பெரிய சக்தி என்பதால், ‘பக்வா’ (காவி) எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறது." என்றார்.
ராஜஸ்தான் பாஜக செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய சதிஷ் பூனியா, மாநில கட்சி இயக்கத்தையும் கவனித்து வந்தார். தற்போது ராஜஸ்தான் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.