2020-ல் இந்தியா-சீனா எல்லையில் மோதல் தொடங்கியதிலிருந்து முதல்முறையாக, சீனாவைக் கையாளும் வெளிவிவகார அமைச்சகத்தில் உள்ள இந்தியாவின் உயர் அதிகாரி, இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான (WMCC) 26வது கூட்டத்திற்கு பெய்ஜிங்கிற்குச் சென்றார்.
ஜூலை 2019 இல் நடைபெற்ற 14 வது கூட்டத்திற்குப் பிறகு இதுவே இந்தியாவிலிருந்து அதிகாரி ஒருவர் நேரடியாக கலந்துக்கொள்ளும் WMCC சந்திப்பு ஆகும்.
இதையும் படியுங்கள்: மத்திய ஆயுத படைகளில் 83,000 காலியிடங்கள்; விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை
மே 2020 இல் கிழக்கு லடாக்கில் தொடங்கிய தொடர்ச்சியான எல்லைப் பிரச்னைகளின் போது, 11 WMCC கூட்டங்கள் நடந்துள்ளன, ஆனால் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தன.
தற்போதைய சந்திப்பு குறித்து, உடனடி தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை மற்றும் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டாலும், சந்திப்பின் முக்கியத்துவம் சீனாவின் தலைநகரில் இந்திய பிரதிநிதி நேரடியாக கலந்துக் கொள்வதில் உள்ளது.
சீன, ஜப்பான் மற்றும் கொரியாவுடனான உறவுகளை கவனித்து வரும், வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் (கிழக்கு ஆசியா) ஷில்பக் அம்புலே இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரத் துறையின் இயக்குநர் ஜெனரல் சீனக் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
மாண்டரின் மொழியில் சரளமாக பேசக்கூடிய ஷில்பக் அம்புலே, சீனத் தலைவர்களான ஹு ஜின்டாவோ, வென் ஜியாபோ, லீ கெகியாங் மற்றும் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரை சந்தித்தபோது, பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கு அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
ஷில்பக் அம்புலே வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக (முதலில் இயக்குனராகவும் பின்னர் இணைச் செயலாளராகவும்) இருந்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை, “இரு தரப்பும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி) நிலைமையை மறுபரிசீலனை செய்து, மீதமுள்ள பகுதிகளில் திறந்த மற்றும் ஆக்கபூர்வமான முறையில் விலகல் முன்மொழிவுகள் குறித்து விவாதித்தன, இது மேற்குத் துறையில் எல்.ஏ.சி.,யில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் இருதரப்பு உறவுகளில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.”
“தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி இந்த நோக்கத்தை அடைய, இருதரப்பு மூத்த தளபதிகள் கூட்டத்தின் அடுத்த (18 வது) சுற்றுகளை முன்கூட்டியே நடத்த ஒப்புக்கொண்டனர். இரு தரப்பும் இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் விவாதங்களைத் தொடர ஒப்புக்கொண்டன” என்று வெளியுறவுத்துறை அறிக்கை கூறியது.
WMCC இன் கடைசி கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் விலகல் ஏற்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நடந்தது. ஆனால், எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. ஜூன் 15, 2020 அன்று, ரோந்துப் புள்ளி 14 க்கு அருகில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டதால், 20 இந்திய வீரர்கள் மற்றும் வெளியிடப்படாத எண்ணிக்கையிலான சீன துருப்புக்கள் இறந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங் பகுதியில் உள்ள ரோந்து தூணில் (15) இந்திய மற்றும் சீன துருப்புக்கள் எல்லையில் இருந்து விலகின. PP-15 இல் விலகல் ஏற்பட்டதன் மூலம், இரு நாடுகளின் படைகளும் பாங்காங் ஷோ, PP-14, PP-15 மற்றும் PP-17A ஆகியவற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள் உட்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து மோதல் புள்ளிகளிலும் விலகல்கள் நடந்தன.
இருப்பினும், டெப்சாங் சமவெளி மற்றும் சார்டிங் நாலா பகுதிகளில் உள்ள LAC இல் இந்தியப் படைகளின் பாரம்பரிய ரோந்துப் பகுதிகளுக்கான அணுகலை சீனப் படைகள் இன்னும் தடுத்து வருகின்றன. ஆகஸ்ட் 2021 இல் PP-17 A இல் கடைசியாக விலகல் செய்யப்பட்டது.
2022 டிசம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டாரில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர், எல்லைப் போராட்டம் தொடங்கியதிலிருந்து கிழக்குத் துறையில் இரு நாடுகளின் முதல் நேருக்கு நேர் மோதல் இது.
எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் இருதரப்பு உறவுகளை பாதித்துள்ளது என்றும், விலகல் மற்றும் பரவலான விரிவாக்கம் ஏற்படும் வரை வழக்கம் போல் வணிகம் இருக்க முடியாது என்றும் இந்தியா கூறி வருகிறது. இந்தியா-சீனா எல்லையின் இருபுறமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் இருதரப்பு அதிகாரிகள் உள்ளிட்ட தலைவர்கள் ஜி-20, SCO மற்றும் பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்பு நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் சந்தித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இருதரப்பு உரையாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இருதரப்பு வான்வெளியிலும் சில முயற்சிகள் நடந்துள்ளன.
கடந்த நவம்பரில் பாலியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் இரவு விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒரு சுருக்கமான “சமூக ரீதியான” சந்திப்பு நடத்தினர். சீன வெளியுறவு மந்திரி வாங் யீ மார்ச் 2022 இல் இந்தியாவுக்கு வந்திருந்தார் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான சீன சிறப்பு தூதர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார். ஜூலை 2022 இல் பாலியில் ஜெய்சங்கரும் வாங்கும் சந்தித்தனர்.
ஜி-20 மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஆகிய இரு அமைப்புகளுக்கும் இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வருவதற்கு குறைந்தது இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் SCO உச்சிமாநாடு நடைபெற வாய்ப்புள்ள நிலையில், ஜி-20 மாநாடு செப்டம்பரில் நடைபெற உள்ளது.
SCO, G-20 ஆண்டில், ஒரு நல்ல சமிக்ஞை
எல்லைப் பேச்சுவார்த்தைக்கு ஒரு உயர் அதிகாரியை பெய்ஜிங்கிற்கு அனுப்பும் இந்தியாவின் நடவடிக்கை, முன்னேறுவதற்கான விருப்பத்தை சமிக்ஞை செய்கிறது. SCO மற்றும் ஜி-20 கூட்டங்கள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என்பதால் சீனாவின் உயர்மட்ட தலைவரின் வருகையை உறுதி செய்வதே வெளிப்படையான காரணம். LAC பகுதியின் நிலைமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பொறுத்தே முடிவுகள் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil