யோகி பேரணியில் முஸ்லிம் பெண்ணின் புர்காவை கழற்ற வைத்த போலீஸ்: மீண்டும் வெடித்த சர்ச்சை
யோகி ஆதித்யநாத் பேரணியில், போலீசார் அறிவுறுத்தலின்பேரில் முஸ்லிம் பெண் ஒருவர் அணிந்திருந்த புர்காவை முழுவதுமாக கழற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட பேரணியில், போலீசார் அறிவுறுத்தலின்பேரில் முஸ்லிம் பெண் ஒருவர் அணிந்திருந்த புர்காவை முழுவதுமாக கழற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
உத்தரபிரதேச மாநிலம் பாலியாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண் ஒருவரிடம் போலீசார், அவர் அணிந்திருந்த புர்காவை கழற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். அதன்பின், நீண்ட விவாதத்துக்கு பிறகு அப்பெண் தன்னுடைய புர்காவை கழற்றுகிறார். புர்காவை முழுவதுமாக கழற்றும்வரை அங்கேயே காத்திருக்கின்றனர் போலீசார்.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேரணியில் முஸ்லிம் பெண்ணின் புர்கா கழற்றப்பட்டதுபோன்று எந்த சம்பவம் குறித்தும் தனக்கு தகவல் வரவில்லை என பாலியா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அனில் குமார் தெரிவித்துள்ளாஎ. "முதலமைச்சர் பேரணியில் யாரும் கருப்பு துணியை காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்", என தெரிவித்துள்ள அனில் குமார், அம்மாதிரி சம்பவம் ஏதேனும் நடைபெற்றிருந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
விசாரணையில் அப்பெண்ணின் பெயர் சாயிரா என்பதும், அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் பேரணிக்கு தனது பாரம்பரிய உடையில் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மீரட்டில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.