மகாரஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் திருமணத்திற்கு பிறகு கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு சகோதரிகள் சோதனையில் தோல்வியுற்றதால் ’ஜாட் பஞ்சாயத்து’ மூலம் விவாகரத்து செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா போன்ற மத்திய மாநிலங்களில் இன்றளவும் உள்ளூர் பஞ்சாயத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. அவர்கள் பழைய பாரம்பரிய வழக்கங்களை இன்னும் கடைபிடித்து வருகின்றனர். அந்த பழக்கவழக்கங்களை மீறுபவர்களுக்கு பஞ்சாயத்துக்கள் மூலம் தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோலாப்பூரில் உள்ள கஞ்சர்பத் சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்த இரு ஆண்களுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஆண்களில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், மற்றொருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு நவம்பர் 27, 2020 அன்று கோலாப்பூரில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு இரு மணப்பெண்களும் அவர்களது சமூகம் காலங்காலமாக பின்பற்றும் பாரம்பரிய முறைப்படி கன்னித்தன்மை சோதனை நடத்துவதற்காக தனித்தனி படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அறையில், மணப்பெண்களுக்கு மணமகன் ஒரு வெள்ளை தாளை கொடுத்து உடலுறவின் போது அதைப் பயன்படுத்தும்படி கேட்டுள்ளார். அதில் இரத்தக் கறைகளை கொண்ட தாள் மணமகளின் கன்னித்தன்மைக்கு சான்றாக இருக்கும். இல்லையெனில் அவர் கடந்த காலத்தில் வேறொரு ஆணுடன் உடல் ரீதியிலான உறவு வைத்து இருந்ததாக குற்றம் சாட்டப்படும்.
இந்நிலையில் ஒரு சகோதரி சோதனையில் தேர்ச்சி பெற்றார். மற்றொருவர் தேர்ச்சி பெறாத்தால் அவர் ஏற்கனவே மற்ற ஆண்களுடன் உடல் ரீதியிலான உறவைக் கொண்டிருந்தாக குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி அவர்களது பிறந்த வீட்டிற்குச் செல்லும்படி கணவன் வீட்டார் கட்டாயப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களின் தாய் உதவிக்காக ஜாட் பஞ்சாயத்து உறுப்பினர்களை அணுகினர். அவர்கள் அந்த பிரச்சனையை தீர்க்க பெண்களின் தாயிடமிருந்து ரூ.40,000 வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 2021ல் ஒரு கோவிலில் ஜாட் பஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டது. பஞ்சாயத்து முடிவில் உறுப்பினர்கள் அவர்களுக்கு விவாகரத்து செய்து வைத்தனர்.
இதனால் அந்த பெண்களின் தாயார் தனது சமூகத்தால் தான் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, உதவிக்காக மகாராஷ்டிரா அந்தாஷ்ரத்தா நிர்முலன் சமிதியை அணுகினார். அவர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்து இரண்டு சகோதரிகளுக்கும் அவர்களது தாய்க்கும் காவல்துறையில் புகார் அளிக்க உதவினர்.
புகாரில், இரு சகோதரிகளும் தங்கள் கணவர்கள் மற்றும் மாமியாரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். மேலும், நவம்பர் 29ஆம் தேதி அவர்களில் ஒருவரின் கணவர் மற்றும் மாமியார் வீடு கட்டுவதற்காக அவரிடமிருந்து ரூ.10 லட்சம் கேட்டதாகவும் இல்லையெனில் இரு சகோதரிகளுடனும் எந்த உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை மாலை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. சகோதரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா சமூக புறக்கணிப்பு (தடுப்பு, தடை மற்றும் குறைப்பு)சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இரண்டு சகோதரிகளுக்கும் விவாகரத்து வழங்கியதற்காக அவர்களின் கணவர்கள், மாமியார் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.