27 வயதான பெண்மணி ஒருவர் காசியாபாத் நீதிமன்றத்தில், கணவன் தான் குண்டாக இருப்பதாக தொடர்ந்து அவமானப்படுத்துவதால் டைவர்ஸ் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் அவர், குண்டான தனது உடலமைப்பை வைத்து, கணவர் தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை தலைமை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொண்டு, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டார்.
பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த அப்பெண், கடந்த 2014ம் ஆண்டு மீரட்டில் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் டிகிரி முடித்து, நொய்டாவில் உள்ள சர்வதேச நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்த பிறகு, கடந்த 2016ம் ஆண்டு தம்பதி இந்திராபுரத்தில் உள்ள பிளாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டனர். தற்போது வரை அங்கிருந்து தான் வசித்து வருகின்றனர்.
மனுவில் அவர், முதலில் கணவர் எந்த துன்புறுத்தலிலும் ஈடுபடவில்லை. காஸியாபாத் மாறிய பிறகு, கணவர் எங்கு வெளியே சென்றாலும், தான் குண்டாக இருக்கும் ஒரே காரணத்தால் எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்று அப்பெண் குற்றம் சாட்டியிருக்கிறார். பார்ட்டிகளுக்கு அழைத்துச் செல்லமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றவர்கள் முன்னிலையில் தனது உடல் எடை குறித்து விமர்சித்து, தன்னை மன ரீதியாக துன்புறுத்தினார். அதுமட்டுமின்றி, தன்னை மது குடிக்கச் சொல்லி வற்புறுத்துவார் என்றும் அதனை மறுக்கும் போது தன்னை அடிப்பார் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.