தெலங்கானாவில் பட்டப்பகலில் பெண் வட்டாட்சியர் அலுவலகத்திலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அப்துல்லாபர்மெத் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. விஜயா ரெட்டி என்பவர் அந்த வட்டாரத்தின் பெண் வட்டாட்சியர். திங்கள் கிழமை வழக்கம் போல, வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்பொது அந்த வட்டாரத்தில் உள்ள குவாரெல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து வட்டாட்சியரின் அறைக்கு சென்றார். அந்த அறையில் வட்டாட்சியர் விஜயா ரெட்டி அலுவலகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவருடன் சுரேஷ் சிறிது நேரம் பேசினார்.
இதையடுத்து சுரேஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வட்டாட்சியர் விஜயா ரெட்டி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விஜயா ரெட்டி தீயில் எரிந்து அலறித் துடித்துள்ளார். இதைப்பார்த்த அலுவலகத்தில் இருந்தவர்கள் சிலர் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதால் விஜயா ரெட்டி உடல் கருகி உயிரிழந்தார்.
பெண் வட்டாட்சியரை உயிருடன் தீவைத்துக் கொளுத்திய சுரேஷை போலீசார் ஹயாத் நகர் காவல் நிலையம் அருகே மடக்கிப் பிடித்தனர். கையில் தீக்காயங்களுடன் இருந்த சுரேஷை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா போலீசார் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனக்கு சொந்தமான இடம் தொடர்பான பிரச்னையில் அநீதி இழைக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே வட்டாட்சியரை எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் சபிதா ரெட்டி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.
தெலங்கானாவில் பட்டப்பகலில் அதுவும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.