உத்தரகாண்ட் மாநிலத்தில், ஆண் போல் வேடமிட்டு இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, உத்தரகாண்ட் மாநிலம் பிஜ்னோர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்டி சென். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு கிருஷ்ணா சென் என்ற பெயரில் முகநூல் கணக்கை ஆரம்பித்து, அதில் ஆண் போல் வேடமிட்ட தன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், முகநூலில் பல பெண்களுடன் சாட்டிங் செய்து வந்திருக்கிறார்.
இதையடுத்து, 2014-ஆம் ஆண்டு முகநூலில் தான் சந்தித்த ஹல்வானி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை, தான் ஒரு ஆண் என அவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு ஸ்வீட்டி சென் கொடுமைபடுத்தியுள்ளார்.
இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு கலதுங்கி பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடன் ஹரித்துவாருக்கு சென்றுவிட்டார் ஸ்வீட்டி.
இந்நிலையில், அவருடைய முதல் மனைவி, தன் கணவர் ஹரித்துவாரில் உள்ள தன்னுடைய தொழிற்சாலைக்காக வேண்டும் என கேட்டு, ரூ.8.5 லட்சத்தை வரதட்சணையாக பெற்றதாக காவல் துறையினரிடம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் புகார் அளித்தார். வரதட்சணைக்காக தன்னை உடல் ரீதியாக தாக்கி துன்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஸ்வீட்டி கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில் தான் ஒரு பெண் என்பதை ஸ்வீட்டி ஒப்புக்கொண்டார். மருத்துவ பரிசோதனையிலும் ஸ்வீட்டி ஒரு பெண் என்பது உறுதியானது.