பெண் ராணுவ போலீஸ் படையில் காலியாக உள்ள 100 பணியிடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெண் ராணுவ போலீஸ் படையில் 100 படைவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக ராணுவம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
ராணுவ தலைமையகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது, 100 பணியிடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. படைவீராங்கனைகள் ஆள் எடுப்பு பணி அம்பாலா, லக்னோ, ஜபல்பூர், பெலகாவி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட ஆள் எடுப்பு, ஜூலை முதல் வாரத்தில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, பெங்களூருவில் உள்ள மிலிட்டரி போலீஸ் ரெஜிமெண்டல் மையத்தில் பயிற்சி அளிக்கப்படும், பின்னர் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
பெண்களுக்கு அதிகளவில் பாதிப்பு உள்ள இடங்கள் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். நாட்டின் எப்பகுதியிலும் இவர்கள் பணியமர்த்தப்படலாம். இந்தாண்டில் 1,700 பெண் படைவீரர்கள் பணியமர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
பெண் ராணுவ படைவீரருக்கான வயது வரம்பு 17.6 வயதிலிருந்து 21 வயதிற்குள் ஆகும். 10ம் வகுப்பில் 45 சதவீதத்துடனான தேர்ச்சியே கல்வித்தகுதி ஆகும்.
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருத்தல் வேண்டும். விதவை, விவாகரத்தானவர்கள், சட்டப்படி பிரிந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் தான். ஆனால், அவர்களுக்கு குழந்தை இருத்தல் கூடாது.
பயிற்சிக்காலம் முடியும்வரை அவர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது.திருமணம் செய்துகொண்டாலோ அல்லது திருமணமானது தெரிந்தாலோ உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அவர் கூறினார்.