ஆந்திராவில் வீடுகளில் கழிவறை கட்டவில்லை என்றால், விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம் என, தங்கள் பெற்றோர்களுக்கு மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவானாது, ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆந்திராவில் மஹர சங்கராத்தி விழாவாக கொண்டாடப்படும். இந்த இரண்டு நாட்களுக்கும் பள்ளிகளுக்கு அங்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில், ஆந்திராவின் பமுறு மாவட்டத்தில் தங்கி படிக்கும் பள்ளியான காஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி மாணவிகள், விடுமுறைக்கு வீட்டுக்கு வர வேண்டும் என்றால் வீடுகளில் தனி கழிவறை கட்ட வேண்டும் என தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “விடுமுறை நாட்களில் நாங்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் என எங்கள் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதனால், எங்களுக்கு வீடுகளில் தனி கழிவறை வேண்டும். கழிவறை கட்டுவதற்கு அரசு தேவையான நிதியுதவியும் அளிக்கிறது”, என எழுதியுள்ளனர்.
மேலும், “மஹர சங்கராத்தி விழாவுக்குள் கழிவறை கட்டவில்லையென்றால், நாங்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம்’, எனவும் அக்கடிதத்தில் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பமுறு மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கழிவறை இல்லை எனவும், இதனால், பெண்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் 31க்குள் ஆந்திராவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டவில்லையென்றால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.