ஆர்.சந்திரன்
உலகின் மிக சுத்தமான எரிபொருளான - யூரோ 6 தர நிலை தகுதி பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் தற்போது இந்தியாவில் விற்பனையாகத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இது தலைநகரான டெல்லியில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1, 2018 முதல், தலைநகரின் அனைத்து பெட்ரோல், டீசல் நிலையங்களிலும் இவ்வகை பெட்ரோல் கிடைக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில், அதாவது 2020 ஏப்ரல் 1 முதல் இந்த எரிபொருள் நாடு முழுவதும் கிடைக்கத் தொடங்கும் என்பது தற்போதைய திட்டம்.
யூரோ 6 அல்லது பிஎஸ் 6 (BS 6 - Bharat Standarads 6) எனக் குறிப்பிடப்படும் தர நிலையின்படி, பெட்ரோல் மற்றும் டீசலில் சர்பர் எனப்படும் கந்தகத்தின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்த பெட்ரோலில் 50 பிபிஎம் (10 லட்சத்தில் ஒரு பங்கு) என்ற அளவுக்கு இருந்த கந்தக மாசு, புதிய எரிபொருளில் 10 பிபிஎம் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கும். இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தி, தரம் உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த காலங்களில் சுமார் 30,000 கோடி ரூபாய் வரை, எண்ணெய் சுத்திகரிப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
விலையைப் பொறுத்தவரை, தற்போது புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பிஎஸ் 6 தரத்தின்படியான பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்கனவே சந்தையில் விற்பனையாகி வந்த எரிபொருளை விட, சராசரியாக லிட்டருக்கு 50 காசுகள் முதல் அதிகபட்சமாக 1 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருளைப் போலவே, வாகனங்களிலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது இந்திய அரசின் விருப்பம். ஏற்கனவே, இந்தியாவில் உள்ள பல வாகன உற்பத்தி நிறுவனங்கள், இங்கு உற்பத்தி செய்து பல வெளிநாடுகளுக்கு பி எஸ்6 தர நிலைப்படியான வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. எரிபொருளைத் தொடர்ந்து விரைவில் வாகனங்களிலும் இந்த மாற்றங்கள் வரலாம். இதன்மூலம் இந்தியாவில் காற்று மாசு அளவை குறைக்க வேண்டும் என்ற முயற்சி நடந்து வருகிறது.