மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை ஹரித்வாருக்கு எடுத்துச் சென்ற நிலையில்- அங்கு அவர்கள் கங்கையில் தங்கள் பதக்கங்களை வீசுவதாக கூறினர். உடனடியாக விவசாய சங்க தலைவர்கள் அவர்களை தடுத்து முடிவுகளை மாற்றம்படி பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் அவர்கள் கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவை கைவிட்டனர்.
இந்நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று (புதன்கிழமை) மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பேசுகையில், இவ்விவகாரத்தில் டெல்லி காவல்துறையின் விசாரணையை நம்புங்கள். அதன் முடிவு வரும் வரை பொறுமையாக இருங்கள் என்று வீரர்களை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பாரதிய கிசான் யூனியன் (BKU) தேசியத் தலைவர் நரேஷ் டிகாயத், செவ்வாயன்று ஹரித்வாருக்கு விரைந்து மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவைத் தடுத்து 5 நாட்கள் காத்திருக்கும் படி பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று (வியாழக்கிழமை) முசாபர்நகரில் உள்ள சௌரம் கிராமத்தில் காப் தலைவர்களின் கூட்டத்திற்கு திகைத் அழைப்பு விடுத்துள்ளார். உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து 30-35 காப் தலைவர்கள் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
டிகாயத்தின் அழைப்பு மேற்கு உ.பி.யைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒரு பிரிவினரிடையே கவலையைத் தூண்டியதாக அறியப்படுகிறது, இது அப்பகுதியில் எதிர்ப்புகளுக்கு வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தப் போராட்டங்கள் இதுவரை டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டுமே நடைபெற்றுள்ளன.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கை முதலில் கைது செய்ய வேண்டும் என்பதே எங்களது ஒரே கோரிக்கை. மற்ற விஷயங்களை நாங்கள் பின்னர் விவாதிப்போம், ”என்று திகாயத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு (WFI) தலைவரும், உ.பி.யைச் சேர்ந்த பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன், ஒரு மைனர் உட்பட ஏழு பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மைனர் மல்யுத்த வீராங்கனையின் குற்றச்சாட்டுகள் உள்பட பிரிஜ் பூஷன் மீது 2 வழக்குகள் டெல்லி காவல்துறையால் ஏப்ரல் 28 அன்று பதிவு செய்யப்பட்டது.
பி.டி.ஐ ஊடகத்திடம் பேசிய பிரிஜ் பூஷன், தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று புதன்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். "எனக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் கொடுங்கள், நீதிமன்றம் என்னை தூக்கிலிட்டால், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் தாக்கூர், மல்யுத்த வீரர்கள் டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை பொறுமை காத்திருக்க வேண்டும். “எனது அன்பான விளையாட்டு வீரர்களே, டெல்லி காவல்துறையின் விசாரணையை நீங்கள் நம்ப வேண்டும். விசாரணை முடிவு வரும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது எந்த விளையாட்டு வீரரையும் காயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.