மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட கிட்டத்தட்ட ஒரு டஜன் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு எதிராக புதன்கிழமை மதியம் 12 மணிக்கு போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர், பா.ஜ.க எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது புதன்கிழமை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
“பெண் மல்யுத்த வீராங்கனைகள் தேசிய பயிற்சி முகாம்களில் பயிற்சியாளர்களாலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்காலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்” என்று வினேஷ் போகட் குற்றம்சாட்டினார்.
“பல இளம் பெண் மல்யுத்த வீராங்கனைகள் தேசிய முகாம்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக என்னிடம் புகார் அளித்துள்ளனர். எனக்குத் தெரிந்து குறைந்தது 20 பெண்கள் தேசிய பயிற்சி முகாமில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.” என்று வினேஷ் போகட் குற்றம்சாட்டினார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு யாராவது ஒரு மல்யுத்த வீராங்கனை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறுகிறார்களா? வினேஷ் மட்டும் சொல்லியிருக்கிறார். தாங்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக யாராவது முன் வந்து கூறியிருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “யாராவது ஒரு மல்யுத்த வீராங்கனை முன் வந்து தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சொன்னால், அன்றே என்னை தூக்கிலிடலாம்.” என்று பிரிஜ் பூஷன் கூறினார்.
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், சங்கீதா போகட், மல்யுத்த வீரர்கள் பஜ்ரங், சோனம் மாலிக் மற்றும் அன்ஷு ஆகியோர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மேலாதிக்க செயல்பாடுகளுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் மற்றும் கிட்டத்தட்ட ஒரு டஜன் மல்யுத்த வீரர்கள் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அதற்கு முன்னதாக பஜ்ரங் கூறுகையில், “எங்கள் போராட்டம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் மல்யுத்த வீராங்கனைகளின் நலன்களை மனதில் கொள்ளாமல் அது செயல்படும் விதத்திற்கு எதிரானது. இதற்கும் எந்த வகை அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் எந்த அரசியல்வாதிகளையும் இங்கு அழைக்கவில்லை. இது முற்றிலும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் மேலும் கூறுகையில், “முடிவெடுக்கும் போது குரல் கொடுக்காத மல்யுத்த வீரர்களின் பிரச்சினையை எழுப்ப நாங்கள் இங்கு வந்துள்ளோம். மல்யுத்த வீரர் நீண்ட காலமாக மௌனமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். ஆனால், இப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எடுக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எதிர்த்து நாங்கள் இனி அமைதியாக இருக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். இங்குள்ள மல்யுத்த வீரர்கள், எங்களுக்கு உதவவும், விளையாட்டிற்கு உதவவும் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாங்கள் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றால், அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு, குறிப்பாக கூட்டமைப்பால் நாங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறோம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகம் எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தால், போராட்டத்தை நிறுத்துவோம். இல்லையேல், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மல்யுத்த வீரர்களை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் வேலைக்காரர்களாக் கருதக் கூடாது.
மல்யுத்த கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதம், பல வருடங்களாக நடந்து வரும் அநீதி பற்றி இன்று பேசுவோம். மல்யுத்த வீரர்களுக்கு என்ன வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. இது நியாயமில்லை, இதை நாங்கள் அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இனி பொறுத்துக்கொள்ள முடியாது”என்று பஜ்ரங் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
வினேஷ் போகட் கூறுகையில், “நான் கூட்டமைப்புடன் பேசி, என்னுடைய பிரச்னைகளையும் பிற மல்யுத்த வீரர்களின் பிரச்சினைகளை சுமார் 10 ஆண்டுகளாக அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால், யாரும் கேட்கத் தயாராக இல்லை.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.