டெல்லியில் பாஜக சார்பில் நடைபெற உள்ள ‘குடிசை பெருமித பேரணி’ தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பாஜக பேனரில் தனது புகைப்படம் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வருகிற 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. பாஜக குடிசை பகுதியில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள குடிசை பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் குடிசைப் பகுதிகளின் ஆதரவை பாஜக எதிர்நோக்கி உள்ளது. பாஜகவின் ஜுக்கி சம்மான் யாத்ரா (குடிசை பெருமித பேரணி) அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. இந்த பேரணியில், மத்திய அரசின் ஏழைகளுக்கு ஆதரவான திட்டங்கள் மற்றும் டெல்லி ஆம் ஆத்மி அரசின் தோல்விகளை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த 45 நாள் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுடன் அரசியல் மோதலைத் தூண்டியுள்ளது.
பாஜக தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இதுவரை 60க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளில் பாஜக, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு உதவும் வகையில் அடுத்த சில நாட்களில் ‘நமோ ஜுக்கி சேவா கேந்திரா’ தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில்தான், டெல்லியில் பாஜக நடத்தும் “குடிசை பெருமித பேரணி” விளம்பரப் பேனரில், பேராசிரியரும் தமிழின் முக்கிய எழுத்தாளருமான பெருமாள் முருகன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. டெல்லியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரின் புகைப்படம் சமூக ஊடகங்க வழியாக வெளியே தெரியவந்துள்ளது.
டெல்லியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் புகைப்படங்களை பத்திரிகையாளர் நமீதா வய்க்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “டெல்லியில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை உன்னிப்பாக பாருங்கள், இந்த போஸ்டரில், பேராசிரியர், எழுத்தாளர் புகைப்படம் பயன்படுத்தபட்டுள்ளது. இந்த படத்தை பொதுவாக இணையதளத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பேனரில், பிரதமர் மோடி, பாஜக தேசியட் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் படம் இடம்பெற்றுள்ளது. அதில், பொதுமக்களின் படமும் குடிசைவாசிகள் என்ற அளவில் இடம்பெற்றுள்ளது. குடிசைவாசிகள் படங்களில்தான் எழுத்தாளர் பெருமாள் முருகன் படத்தை அச்சிட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக நடத்தும் குடிசை பெருமித பேரணிக்கான விளம்பர பேனரில் தனது புகைப்படம் இடம்பெற்றிருப்பதை அறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், தனது முகநூல் பக்கத்தில் அந்த பேனரைக் குறிப்பிட்டு குடிசைவாசிகளில் ஒருவனாக இருகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ புத்தகத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சையானது. இவருடைய படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”