கை, கால்களை கட்டி தூக்கி வந்து ஓட்டு போட வையுங்கள்! - எடியூரப்பா

கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பசவண்ட்ராய் -வுக்கு ஓட்டுப்போட வையுங்கள்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் முக்கிய எதிர்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக தேர்தல் களத்தில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் போட்டி போட்டுக் கொண்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சித்தும் வருகின்றனர்.

நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, “இந்திரா காந்தி காலத்தில் இருந்தே, ஏழை மக்களை முட்டாளாக்கி வெற்றிப் பெறுவதையே காங்கிரஸ் வழக்கமாக கொண்டிருக்கிறது. இப்போதும் பொய் மேல் பொய் பேசியே பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு விவசாயிகள் மீதும், ஏழை மக்களின் மீதும் என்றுமே அக்கறை இருந்தது இல்லை.  ‘C’ என்பதற்கு காங்கிரஸ் என்றும் அர்த்தம் கொள்ளலாம். கரப்ஷன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்” என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று பெலகாவியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கட்சி தொண்டர்களிடம், ”இது ஓய்வெடுக்கும் நேரம் அல்ல. வாக்காளர்கள் யாராவது ஓட்டுபோட வரவில்லையென்று தெரிந்தால், அவர்கள் வீட்டுக்குச் சென்று, அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பசவண்ட்ராய் -வுக்கு ஓட்டுப்போட வையுங்கள்’’ என்று பேசினார். பசவண்ட்ராய், கிட்டூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவதாகவும், தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாக்காளர்கள் ஓட்டுபோட வரவில்லையென்று தெரிந்தால், அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பாஜகவுக்கு ஓட்டுப்போட வையுங்கள் என எடியூரப்பா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

×Close
×Close