கர்நாடகாவில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் இந்த விசாரணை குறித்த எதிர்ப்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. 

 கர்நாடகாவில்  எடியூரப்பாவை  ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் மற்றும் மஜத தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது. 

LIVE UPDATES: 

பகல் 12.50 : மெஜாரிட்டியை நிரூபிக்க தங்களிடம் போதிய ஆதரவு இருப்பதாகவும், ‘வெயிட் அன்ட் வாட்ச்’ என கர்நாடகா பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறது.

பகல் 12.30 : கர்நாடக சட்டப்பேரவையில் நாளை ரகசிய வாக்கெடுப்பு இல்லை. யாருக்கு ஆதரவு என்பதை எம்.எல்.ஏ.க்கள் கையை உயர்த்தி தெரிவிக்கலாம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த பாஜக தரப்பு வைத்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

பகல் 12.10 : மெஜாரிட்டியை நிரூபிப்போம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பகல் 12.10 : பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள தயாராகவும், வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பகல் 12.05 : வாக்குச்சீட்டு அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. ‘அப்படி எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க முடியாது’ என்றார்கள் நீதிபதிகள்.

பகல் 12.00 : உச்ச நீதிமன்ற உத்தரவை காங்கிரஸ் வரவேற்றிருக்கிறது. அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சர்ஜிவாலா கூறுகையில், ‘அரசியல் சட்டம் வென்றிருக்கிறது. ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எடியூரப்பா ஒரு நாள் முதல்வராக இருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான முதல்வரையும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பான ஆளுனரின் முடிவையும் அரசியல் அமைப்புச் சட்டம் நிராகரித்திருக்கிறது’ என குறிப்பிட்டார்.

பகல் 11.50 : ‘கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பகல் 11.45 : நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகல் 11.40 : பெரும்பான்மையை நிரூபிக்க திங்கள் வரை அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பகல் 11.35 : சட்டப்பேரவை வரும் எம்.எல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக மாநில டிஜிபிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பகல் 11.30 : நாளை (மே 19) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகல் 11.25 : ‘எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

பகல் 11.20 : ‘குமாரசாமிக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநரிடம் அளிக்கப்படவில்லை’ என கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்தார்.

பகல் 11.20 : ‘நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ்- மஜத தயார். கால தாமதமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என காங்கிரஸ்-மஜத தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

பகல் 11.20 : ‘நம்பிக்கை வாக்கெடுப்பு கோர எங்களுக்குதான் முதலில் வாய்ப்பு தர வேண்டும்’ என காங்கிரஸ், மஜத தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பகல் 11.15 : ‘கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுனர் அழைத்த முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள் தான் உள்ளன’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பகல் 11.10 : ‘கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா? நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா?’ என பாஜக தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பகல் 11.05 : பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிடுகையில், ‘தனது கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்த பட்டியலை குறிப்பிடவில்லை. தேவைப்படும்போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது’ என்றார்.

பகல் 11.00: உச்ச நீதிமன்ற விசாரணையில் நீதிபதி சிக்ரி பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் காரசாரமாக கேள்விகள் எழுப்பினார். ‘பெரும்பான்மை இருப்பதாக காங்-மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன்?’ என்றும் சிக்ரி கேள்வி எழுப்பினார்.

காலை 10.55 : காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிடுகின்றனர்.

மே 15-ம் தேதி ஆளுனரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோருவதாக கூறப்பட்டிருக்கிறது.
மே 16 -ம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு தங்களுக்கு உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

காலை 10.50 : மே 15, 16 தேதிகளில் ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடித நகல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி 2 கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

காலை 10.45 : 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை தொடங்கியது.

காலை 10.15:   உச்சநீதிமன்றத்தில் முதல் வழக்காக  எடியூரப்பா பதவியேற்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எஸ். பாப்தே, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, 4 மணிநேரம் காரசார விவாதத்திற்கு பிறகு எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என உத்தரவிட்டனர். அத்துடன், மே 15ஆம் தேதி ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநருக்கு எழுதிய கடிதத்தையும் இன்று காலை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று (18.5.18) காலை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த  வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வழங்கிய 15 நாள் அவகாசமும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இந்த விசாரணை குறித்த எதிர்ப்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

 

 

×Close
×Close