அண்டை மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மைசூருவின் வருணா சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு உறுப்பினரும், முன்னாள் முதல் அமைச்சருமான பி.எஸ். எடியூரப்பாவின் இரண்டாவது மகன் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சித்த ராமையாவை களம் இறக்குகிறது. கோலார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என சித்தராமையா அறிவித்திருந்த போதிலும், காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியலில் வருணா தொகுதியில் சித்தராமையாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தொகுதியில் 2008, 2013 என இரண்டு முறை சித்தராமையா வெற்றிப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்திரா வெற்றி பெற்றிருந்தார்.
இது தொடர்பாக பி.எஸ். எடியூரப்பாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து ஆலோசனைகள் நடந்துவருகின்றன.
இந்தத் தொகுதியில் பொருத்தமான வேட்பாளரை நிறுத்துவோம்” என்றார்.
இதற்கிடையில், விஜயேந்திரா, தற்போது எடியூரப்பா பிரதிநிதித்துவப்படுத்தும் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தீவிர அரசியலில் இருந்து பி.எஸ். எடியூரப்பா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டிலும் யதீந்திராவை எதிர்த்து வருணா தொகுதியில் விஜயேந்திரர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியில் டி.பசவராஜுவை நிறுத்த பாஜக தலைமை முடிவு செய்தது. அந்தத் தேர்தலில் பசவராஜ் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கர்நாடகாவில் மே10ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே13ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. அதில், காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறின.
இந்த நிலையில் இன்று (மார்ச் 30) செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ். எடியூரப்பா, “கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் கூறுகிறதே என்ற கூற்றை நிராகரித்தார்.
தொடர்ந்து, “மக்களின் நாடித் துடிப்பை நான் அறிவேன். கர்நாடகாவில் பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று ஆட்சியை தக்க வைக்கும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“