டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, மஞ்சள் எச்சரிக்கையின் கீழ் கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவும் கொரோனாவின் புதிய மாறுபாடு ஒமிக்ரான், இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 165 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமானால் விடுக்கப்படும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை எனப்படும் பகுதி நேர ஊரடங்கை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நகரில் 0.5%க்கு மேல் கொரோனா பாதிப்பு விகிதம் இருந்தாலும், ஒரு வாரத்தில் 1,500க்கு மேற்பட்டோர் பாதிக்கப்படபோதும் அல்லது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் சராசரி ஆக்கிரமிப்பு ஒரு வாரத்திற்கு 500 ஆக இருக்கும் போது மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்படி, டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 0.55% மற்றும் திங்கட்கிழமை 0.68% ஆக பாசிட்டிவ் விகிதம் இருந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகுதி நேர ஊரடங்கை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறிக்கு கெஜ்ரிவால் கூறுகையில், " கடந்த சில நாட்களாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் கவலைப்படவும் அச்சமடையவும் தேவையில்லை. பெரும்பாலும் லேசான மற்றும் அறிகுறியற்ற பாதிப்புகள் தான் பதிவாகுகின்றன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களை ஐசியூவிலோ அல்லது ஆக்சிஜன் சப்போர்ட் வழங்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால் நோய் பரவி உங்கள் உடல்நிலை முடியாமல் போவதை நாங்கள் விரும்பவில்லை. பாதிப்பை சமாளிக்கவே, பகுதி நேர ஊரடங்கை முன்பே அறிவித்திருக்கிறோம்" என்றார்.
டெல்லி அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்:
- இரவு ஊரடங்கு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
- தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.
- பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள்,மைதானம் மூடப்படுகின்றன.
- திருமண நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஆனால், மண்டபங்களில் திருமணத்தை நடத்திட அனுமதியில்லை
- அதேபோல், இறுதிச்சடங்குகளிலும் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
- சந்தைகள் மற்றும் மால்களில் உள்ள கடைகள் ஒற்றப்படை - இரட்டைப்படை தேதிகள் அடிப்படையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி
- ஒரு நகராட்சி மண்டலத்திற்கு ஒரு வாரச் சந்தை பாதி நேரத்திற்கு செயல்பட அனுமதி
- தனியாக இருக்கும் கடைகள் ஒற்றைப்படை - இரட்டைப்படை தேதிகள் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டியதில்லை.
- அத்தியாவசிய சேவை அளிக்கும் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
- அனைத்துவித மத அரசியல் கூட்டங்கள் செயல்பட அனுமதி கிடையாது.
- உணவகங்கள் இரவு 10 மணி வரை 50 சதவீத இருறக்கைகளுடன் செயல்பட அனுமதி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil