யோகா தினம்: மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் யோகா செய்துக்கொண்டிருந்த பெண் பலி

Yoga Day : சர்வதேச யோகா தினமான நேற்று உத்தரகண்டில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்து பலி

சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். இதே போல இந்தியாவின் பல பகுதிகளிலும் யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்தத் தினத்தில், உத்தரகண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். உத்தரகாண்ட மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோடி, யோகாவில் உள்ள பல ஆசனங்களை மக்களோடு ஒன்றாக இணைந்து செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்த 73 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலென்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து டேராடூன் போலீஸ் எஸ்பி பிரதீப் ராய் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலென்ஸ், மருத்துவர்கள் தயாராக வைக்கப்பட்டு இருந்தனர். அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்ததும் அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி வழங்கினர். முதலுதவியில் எந்தத் தேர்ச்சியும் இல்லாததால் உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவருக்கு உரியச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவர்களின் அறிக்கைக்கு பின்புதான் அந்தப் பெண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்” எனக் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close