அயோத்தியில் 221 மீட்டரில் ராமர் சிலை: உ.பி.அரசு உறுதி

சிலைக்கு மேல் உள்ள குடையின் உயரம் 20 மீட்டராகவும், கால்பகுதியில் உள்ள மேடை 50 மீட்டர் உயரத்திலும் இருக்கும்

அயோத்தியில் 221 மீட்டர் ராமர் சிலை அமைப்பதற்கான வரைவு திட்டப்பணிகளையும், மாதிரியையும் முதலமைச்சர் யோகி உறுதி செய்துவிட்டதாக உத்தர பிரதேச மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனீஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உலகிலேயே மிக உயரமான வல்லபாய் படேலின் சிலையை அவரது பிறந்தநாளன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் மிகப்பெரிய ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே, யோகி ஆதித்யநாத் ஒரு துறவி. அதனடிப்படையில் அவர் அயோத்திக்காக ஏதாவது திட்டம் வைத்திருப்பார். அயோத்தியில் கோயில் தொடர்பாகவும் தீபாவளியில் நிச்சயம் நல்ல செய்தி ஒன்றை அவர் வெளியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் யோகி, அயோத்தி நகரம் உத்தரபிரதேசத்தின் சிறந்த நகரமாக கட்டமைக்கப்படும் என்றும், அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ராமர் சிலை அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அயோத்தியில் 221 மீட்டர் ராமர் சிலை அமைப்பதற்கான வரைவு திட்டப்பணிகளையும், மாதிரியையும் முதலமைச்சர் யோகி உறுதி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியுள்ள கூடுதல் தலைமை செயலர் அவனேஷ் அவஸ்தி, அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் சிலை, 221 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். சிலையின் உயரம் 151 மீட்டராகவும், சிலைக்கு மேல் உள்ள குடையின் உயரம் 20 மீட்டராகவும், கால்பகுதியில் உள்ள மேடை 50 மீட்டர் உயரத்திலும் இருக்கும். இந்த சிலை வெண்கலத்தில் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிலை மட்டுமல்லாமல் அயோத்தியின் பழமையை விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், சிலை அமைக்கப்பட உள்ள இடத்தில் மண் சோதனை, காற்றின் வேகம் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close