ஷ்யாம்லால் யாதவ், இந்தியன் எக்ஸ்பிரஸ்:
யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராக பதவியேற்று, இன்னும் ஒருவார காலத்தில் ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ளன. அவருடைய பணி காலை ஏழு மணி முதல் துவங்குகிறது. எல்லா மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகளுடன் செல்ஃபோனில் உரையாடுதலில் துவங்கி, அவரை பார்க்க வரும் எல்லோரையும் பார்த்துவிட்டு தாமதமாகவே இரவில் உறங்க செல்கிறார். லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 5 மணியளவில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுவினர் அவரை சந்தித்தோம்.
இந்த ஆறுமாத காலத்தில், உங்கள் அரசு நிறைவேற்றிய 5 பெரும் சாதனைகளாக நீங்கள் எதை பார்க்கிறீர்கள்?
இந்த அரசை மக்கள் நம்புவதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். உத்தர பிரதேச மக்கள் இப்போது பாதுகாப்பாக உணர்கின்றனர். நாடு முழுவதும் உத்தரபிரதேசம் குறித்த மனநிலை மாறியிருக்கிறது. இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அரசில் வெளிப்படைத்தன்மையை நாங்கள் பின்பற்றி வருகிறொம். ஊழலை வேரறுத்துள்ளோம். விவசாயிகள், இளைஞர்களுக்கான நலத்திட்டங்களை நோக்கி பயணிக்கிறோம். குடிமக்கள் மீது எந்த விதமான அதிக வரியையும் புகுத்தாமல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கோதுமையை கொள்முதல் செய்திருக்கிறோம். வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக, ஒரு வருடத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உத்தரபிரதேசத்தில் சட்ட, ஒழுங்கு பிரச்சனைகள் இருக்கும்போது எந்த முதலீட்டாளர்களும் வர மாட்டார்கள். உள்ளூர் மாஃபியாக்கள் முதலீட்டாளர்களுக்கு தடையாக இருப்பார்கள். நொய்டா, காஸியாபாத் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அழிவை சந்தித்து வருகின்றதே?
கடந்த 5 மாதங்களில் உத்தரபிரதேசத்தில் எந்தவித கலவரங்களும் இல்லை. ஜான்சியில் ஒரே ஒரு கடத்தல் சம்பவம் நடைபெற்றது. கடத்தப்பட்ட தொழிலதிபரும் மீட்கப்பட்டு குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனர். முன்பு அரசியல்வாதிகளின் பாதுகாப்பில் இருந்த குற்றவாளிகள் பலரும் வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலானோர் சிறையில் இருக்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு ஜாமீன் ரத்தாகிவிட்டது. உத்தரபிரதேசத்தில் சட்டமும் சரியாகவே இருக்கிறது. அந்த வகையில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். இங்கு அதிகளவில் குற்றங்கள் நடைபெறுவதாக குறுகிய காலத்திற்குத்தான் உணர்ந்திருக்கிறோம். இப்போது குற்றங்கள் குறைந்துவிட்டன. சட்டத்தை மீற யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு திறன் மேம்பாட்டு மையத்தையும், தொழிற்சாலைகளுடன் இணைத்து வருகிறோம். இதன்மூலம், இதுவரை 6 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்று பல்வேறு வர்த்தக துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த மையங்களுக்கு நான் நேரடியாக சென்று அவர்களது அனுபவங்களை கேட்டிருக்கிறேன்.
மின்விநியோகத்தில் நிலவிவந்த வி.ஐ.பி. கலாச்சாரத்தையும் நாங்கள் ஒழித்திருக்கிறோம். முன்பெல்லாம் 5 மாவட்டங்கள் மட்டுமே மின்விநியோகத்தில் முதன்மையானதாக இருக்கும். இப்போது, எல்லா மாவட்டங்களுமே சமமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் 24 மணிநேர மின்விநியோகத்தை பெற வேண்டும் என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். ஒரு கோடி பேர் சட்டத்திற்கு புறம்பாக மின் இணைப்பு பெற்றுள்ளனர். அதனை அவர்கள் சட்டப்பூர்வமாக பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், 10 லட்சம் பேரின் மின் இணைப்பை சட்டப்பூர்வமானதாக ஆக்கியிருக்கிறோம்.
கனிம வளங்கள் கொள்ளையை தடுத்தல், சட்டத்திற்கு புறம்பான இறைச்சி கூடங்களை மூடுதல், நில ஆக்கிரமிப்பை தடுத்தல் இவற்றில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நில ஆக்கிரமிப்பு குற்றங்களில் மட்டும் 1.53 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மற்ற சமூகத்தை சேர்ந்த அதிகாரிகளை நீக்கிவிட்டு, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
இது தோல்வியடைந்தவர்களின் குற்றச்சாட்டு. ஆனால், இவை 100 சதவீதம் மாறியிருக்கிறது என நான் சொல்ல மாட்டேன். ஆனால், முந்தைய அரசுகளை விட, 75 சதவீதம் இதில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். மீதம் 25 சதவீதமும் சரிசெய்யப்படும் என மக்கள் நம்ப வேண்டும். இதனை மாற்ற வேண்டும் என்றுதான் நான் ஆரம்ப பள்ளிகள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், வட்டாட்சியர் அலுவலங்கள் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் யாரும் எதிர்பாராத விதமாக சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறேன். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றேன். அமைச்சர்கள் சென்றனர். மூத்த அதிகாரிகள் அங்கு முகாமிட்டனர். வெள்ள இழப்புகளை சரிசெய்வதில் எந்தவொரு மாவட்டத்தில் இருந்தும் புகார்கள் வரவில்லை. அதேபோல், வெள்ளத்திற்கு பிறகு ஏற்படும் தொற்று நோய்கள் குறித்தும் புகார்கள் எழவில்லை. இதுதான் எங்கள் நிர்வாகத்தின் தாக்கம்.
கடந்த 15 வருடங்களாக இந்த மாநிலத்தின் முதலமைச்சர்கள் ஒன்று தலித்தாகவோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராகவோ தான் இருந்திருக்கின்றனர். இப்போது, இந்த சமூகத்தினர் தனிமைப்படுத்தப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
சாதி அரசியல் மற்றும் குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டனர். சாதி, குடும்ப பெயரை சொல்லி இன்னும் எவ்வளவு திருடுவார்கள்? சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தங்கள் சொந்த சாதிகளை சேர்ந்தவர்களுக்கே நல்லதை செய்யவில்லை. அவர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் அமைப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இப்போது நாங்கள் காவல் துறையில் புதிதாக 40,000 பேரை புதிதாக சேர்த்திருக்கிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில், காவல் துறையில் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்போம். யு.பி.பி.எஸ்.சி. , ஆசிரியர் காலி பணியிடங்கள் என எல்லாவற்றிலும் பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத் தன்மை நிலவுகிறது. குரூப் சி, டி பணிகளுக்கு நேர்காணல் செய்வதை நாங்கள் நிறுத்துவிட்டோம். சாதி, மதம் பெயரால் இல்லாமல், வளர்ச்சி, விவசாயிகளின் நலம், பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் நலம் ஆகியவற்றின் பெயராலேயே இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி அமையும். எந்த சாதியினரும் தனித்துவிடப்பட மாட்டார்கள்.
ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்போதாவதுதான் பாடம் கற்பிக்கின்றனர், உள்ளூர் அரசியல்வாதிகளுக்காக அவர்கள் வேலை செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இடைநிலைக் கல்வியில் 50 சதவீதத்துக்கும் மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் 70 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன. கல்வியின் தரம் குறைந்துள்ளது.
கல்வியில் முழு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என நாங்கள் உணர்கிறோம். அதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆசிரியர்கள் பணியிட மாற்றம் மற்றும் காலியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்துள்ளோம். எந்தவிரு அரசியல்வாதி, அதிகாரியின் பரிந்துரைகளும் தேவையில்லை. ‘ஸ்கூல் சாலோ’ எனும் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், 1.53 மாணவர்களை புதிதாக ஆரம்ப பள்ளிகளில் சேர்த்திருக்கிறோம். இது நாங்கள் வைத்திருந்த 1.36 இலக்கை விட அதிகம்.
எல்லா அரசு அதிகாரிகளையும், எம்.எல்.ஏ.க்களையும் அவர்களது கிராமத்தில் ஒரு பள்ளியை தத்தெடுத்து, அதனை முன்மாதிரி பள்ளியாக வளர்த்தெடுக்க முயற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம். இதன்மூலம், 1,000 பள்ளிகளை மாற்றியிருக்கிறோம். ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி தேவைப்பட்டால் உயர்கல்வியிலும் பாடத்திட்டங்களில் முழுவதும் மாற்றம் செய்யப்படும்.
இடைநிலைக் கல்வியில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஆரம்ப கல்வியில் 10,000 ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர். அதனால், அவர்களைக் கொண்டு இடைநிலைக் கல்வியில் காலி பனியிடங்கள் சரிசெய்யப்படும்.
உத்தரபிரதேசத்தில் பாஜக இவ்வளவு பெரும்பான்மையை பெற்றிருப்பது இதுவே முதன்முறை. எதிர்கட்சி அவ்வளவு பலமானதாக இல்லை. அதனால், அப்படிப்பட்ட பலமிழந்த எதிர்கட்சியின் முன் உங்களுக்குள்ள சவால்கள் என்னென்ன? உங்களுடைய 325 எம்.எல்.ஏ.க்களை எப்படி திருப்திப்படுத்துகிறீர்கள்?
பாஜகவில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் மாநில வளர்ச்சி குறித்து மட்டுமே சிந்திக்கின்றனர். நான் எப்பொழுதும் லக்னோவில் மட்டும் அமர்ந்து கொண்டிருக்கவில்லை. மாநிலம் முழுதும் பயணிக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்களை சந்திக்கிறேன். ஏற்கனவே, மாநிலம் முழுவதையும் ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இப்போது இரண்டாவதாக
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்கிறேன். மூன்றாவது முறை, ஒவ்வொரு வட்டத்திர்கும், நான்காவது முறை ஒவ்வொரு வார்டுக்கும் பயணிப்பேன். 15 வருடங்களாக ஒரே மாதிரியாக உள்ள இந்த அமைப்பை மாற்ற நிறைய காலம் செலவாகும். ஆனால், நிச்சயம் இந்த நிலைமை மாறும்.
நீங்கள் பெரும்பாலும் அதிகாரிகளையே நம்புவதாகவும், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை நம்புவதில்லை எனவும் சொல்கிறார்களே.
இங்கே நான் செயலாற்ற வந்திருக்கிறேன். அதற்காக நான் யாரையாவது நம்ப வேண்டும். நான் நினைப்பதை செயலாற்றுபவர்களை நான் நம்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள் சொல்வதையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். அவர்களின் உதவியுடன் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
பாஜக ஆளும் எல்லா மாநிலங்களிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் எப்படி ஒன்றாக செயல்படுகிறார்களோ அதை பொறுத்துதான் ஒரு முதலமைச்சரின் வெற்றி, தோல்வி இருக்கும் என சொல்லப்படுகிறதே? பணியிட மாற்றம், பணியிடத்தை நிரப்புவதில், மூத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சொல்வது ஆதிக்கம் செலுத்தப்படுவதாக உங்கள் அரசில் உள்ள சிலரே கூறுகின்றனரே?
நிர்வாகத்தில் யாருடைய தலையீடுகளும் இல்லை. ஆனால், கொள்கை ரீதியாக முடிவெடுப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கலந்தாலோசிப்போம். அவர்கள் கள நிலவரத்தை எடுத்து கூறுவார்கள். ஆனால், நிர்வாகத்தில் எந்த தலையீடுகளும் இல்லை.
பணியிட மாற்றம், பணியிடங்களை நிரப்புதல் இவற்றில் தான் உத்தரபிரதேசத்தில் அதிகப்படியான ஊழல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இவை இரண்டுக்குமான நடைமுறைகள் ஜூன் மாதத்திலேயே முடிந்துவிடும். ஆனால், உங்களுக்கு கீழ் உள்ள துறைகளான வணிக வரி உள்ளிட்ட துறைகளில் இன்னும் பணியிட மாற்றத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பட்டியல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதற்கான உத்தரவு நகல் பொது தளத்தில் இல்லை. அதிகாரிகளிடம் நேரடியாகவே தெரிவிக்கப்படுகிறது. ஏன் இவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை?
இப்போது வெளியாகும் பட்டியல் என்னுடைய அனுமதியின்மையால் தாமதமானவை. ஜி.எஸ்.டி. நடைமுறையால் இந்த நடைமுறைகள் தாமதமாகியுள்ளன. எல்லா பணியிட மாறுதல்களும் என்னுடைய அனுமதியுடன் நடக்கின்றன. பல வருடங்களாக ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களுக்கே இடமாற்றம் வழங்கப்படுகின்றன. இவற்றுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தலைமையகத்தில் கோப்புகள் எல்லாம் நீண்ட காலத்திற்கு கவனிக்கப்படாமல் இருப்பதாகவும் புகார்கள் உள்ளன.
அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. ஆனால், இப்போது மூன்று நாட்களுக்கு மேல் கோப்புகளை கிடப்பில் போட்டால் அதிகாரிகளை அழைத்து கேள்வி கேட்கிறோம். முதலில் அந்த பிரச்சனையை கவனித்து முடித்துவைக்க சொல்லுவோம். கோப்புகளை கிடப்பில் போட்டாலோ , அல்லது ஏதேனும் தவறான செயல்களில் ஈடுபட்டாலோ யாரும் தப்பிக்க முடியாது.
அரசு நிர்வாகம் கட்சி ரீதியாக அல்லாமல் பெரும்பான்மையாக சாதி ரீதியாக பிரிந்துள்ளது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கிறீர்கள்?
அரசியல்வாதிகள் எந்த வழியில் செல்கிறார்களோ அதன்படிதான் அரசு நிர்வாகமும் இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே பாஜகவின் தேர்தல் அறிக்கையை அதிகாரிகளிடம் அளித்து இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என கூறினோம். எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து கூட்டம் நடத்துகிறேன். அவர்களுடைய கருத்துகள், ஆலோசனைகள் எல்லாமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. என்னுடைய அதிகாரிகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், நானே பலவற்றை செய்கிறேன். ஒவ்வொரு வாரத்திற்கும் இந்த நடைமுறைகளை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் இச்சம்பவத்தை மருத்துவமனையின் நிர்வாகமின்மையால் நிகழ்ந்தது என கருதுகிறீர்களா? மருத்துவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையானது என நீங்கள் சொல்வீர்களா?
இது கடுமையான நடவடிக்கை அல்ல. கோரக்பூர் சம்பவம் தவறான வழியில் சித்தரிக்கப்பட்டுவிட்டது. அது சித்தரிக்கப்பட்ட விதத்தில் உண்மைத் தன்மை இல்லை. ஆனால், இந்த சம்பவத்திலிருந்து வேண்டுமென்றே எங்களை அழிக்க நினைக்கும் சிலர் இருந்தனர் என்பது தெரிகிறது. அந்த மாதிரியானவர்களுக்கு எதிராகத்தான் கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது. அவர்களுக்கு நிச்சயம் பாடம் கற்பிக்க வேண்டும். சிலவற்றை நடைமுறைப்படுத்துவதில் இடைவெளிகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் அரசு நிதி வழங்கும்போது, ஏன் இந்த சம்பவம் நடைபெற்றது? அல்லது யாரேனும் அரசு நிதியின் மூலம் அவற்றை வாங்கி தனியாருக்கு விற்றுவிட்டார்களா? அவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை தேவை. அவர்கள் அரசின் பணத்தை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆக்ஸிஜன் உருளைகளின் சப்ளையை நிறுத்தியவரும் குற்றவாளி. கோரக்பூர் சம்பவம் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை இம்மாதிரியானவர்களுக்கு பாடமாக அமைகிறது.
பசு பாதுகாப்புக்காக நீங்கள் நிறைய செயல்படுகிறீர்கள். ஆனால், பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் குற்றசம்பவங்கள் குறித்து என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
நான் பதவியேற்ற அன்றிலிருந்து அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏனென்றா சட்டத்திற்கு புறம்பான இறைச்சி கூடங்களை நாங்கள் மூடிவிட்டதால் அத்தகைய சம்பவங்கள் நடைபெறவில்லை.
உங்களின் இந்து யுவ வாஹினி அமைப்பின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
இந்து யுவ வாஹினி முழுக்க முழுக்க கலாச்சார மையம். அரசு சாரா அமைப்பு. அவர்கள் கல்வி, கிராம வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கான நன்மைக்காக பணிபுரிய அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
நீங்கள் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு 3 முறை அயோத்தியாவுக்கு சென்றிருக்கிறீர்கள். 2019 நாடாளுமன்ர தேர்தலில் அயோத்தியா விவகாரம் எந்தளவுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும்?
அயோத்தியா விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு தினசரி நடவடிக்கையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது நீதிமன்றத்தில் தான் தீர்த்து வைக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த பல ஆண்டுகளாக திறனற்ற தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டனர். இங்கு வேலைவாய்ப்பின்மை, சுயதொழிலில் ஊக்கமின்மை, தொழில்துறை வளர்ச்சியின்மை ஆகிய காரணங்களால், மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரங்களுக்காக பல இடங்களுக்கு சென்றனர். இப்போது அந்த நிலைமையை மாற்ற திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? மேலும், வெளிமாநிலங்களிலிருந்து இங்கு பணிபுரிபவர்களுக்கு திட்டங்கள் உள்ளனவா?
நாங்கள் ஏற்கனவே தொழில் ரீதியான கொள்கை முடிவுகளை வகுத்துள்ளோம். முதலீட்டாளர்களுக்கு அவை பிடித்திருக்கின்றன. திறன் மேம்பாட்டு மையங்கள், தொழில்முறை கல்வி மையங்கள் என பலவற்றை புதிதாக உருவாக்கியுள்ளோம். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் வெளிமாநிலங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் உத்தரபிரதேசத்திற்கு திரும்புவார்கள். சமீப காலமாக, வெளிமாநிலத்தவர்களுக்கும் நாங்கள் வேலைவாய்ப்பை அளித்திருக்கிறோம்.
சில கருத்துக் கணிப்புகள் நீங்கள் பிரபலமாகிவிட்டதாக சொல்கிறது. சிலர் நீங்கள் டெல்லியில் நரேந்திரமோடியின் இடத்தையே பிடித்துவிடுவீர்கள் என கூறுகின்றனர்...
உத்தரபிரதேசத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்க கட்சி எனக்கு இந்த கடமையை அளித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னுள்ள சவால்களை நான் எதிர்கொள்வேன். இந்த மாநில மக்கள் மற்றும் மத்திய அரசு எனக்கு முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். உத்தரபிரதேசம் இந்தியாவின் எடுத்துக்காட்டாக விளங்கும்.
தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.