With Yogi Adityanath in poll fight, Hindu Yuva Vahini steps out of shadows: உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், 2002 இல் அவர் நிறுவிய இந்து யுவ வாஹினி என்ற இளைஞர் அமைப்பானது அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகிறது.
உத்திரபிரதேச தேர்தலின் ஆறாவது கட்டமான மார்ச் 3 அன்று தான் கோரக்பூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் வாஹினி அமைப்பின் உறுப்பினர்கள் ஏற்கனவே கோரக்பூர் தொகுதியில் நேரடியாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். வாஹினி நிர்வாகிகள் தினசரி கூட்டங்களை நடத்தி, அவர்களின் பிரச்சார உத்திகளை வகுத்து வருவதோடு, முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
வாஹினி அமைப்பின் கோரக்பூர் பொறுப்பாளர் ரிஷி மோகன் வர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எங்கள் புரவலர் மகாராஜ் ஜி (யோகி ஆதித்யநாத்) தேர்தலில் போட்டியிடுவதால், எங்கள் பொறுப்பு அதிகரித்துள்ளது. எங்கள் முழு கவனம் சமூக ஊடக பிரச்சாரத்தில் உள்ளது. எங்கள் தகவல் தொழில்நுட்ப குழுக்கள் மாநில அரசு செய்யும் பணிகளை பிரபலப்படுத்த உழைத்து வருகின்றன என்று கூறினார்.
வாஹினி அமைப்பு பாஜகவுடன் ஒருங்கிணைந்து செயல்படுமா என்பது குறித்து கூறுகையில் “நாங்கள் (வாஹினி மற்றும் பாஜக) தனித்தனியாக கூட்டங்களை நடத்துகிறோம், ஆனால் யோகி ஜியின் வெற்றியை உறுதிசெய்யும் பொதுவான குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறோம். மேலும், தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று வர்மா கூறினார்.
யோகி ஆதித்யநாத் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சாரம் மற்றும் பசு பாதுகாப்பு மற்றும் தீண்டாமைக்கு எதிராக செயல்படும் அமைப்பாக வாஹினி அமைப்பை நிறுவினார். வாஹினியும் அதன் செயல்பாடுகளும் கோரக்பூர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களான குஷிநகர், சந்த் கபீர் நகர், மஹராஜ்கஞ்ச், மௌ, பல்ராம்பூர் மற்றும் ஷ்ரவஸ்தி போன்ற மாவட்டங்களில் மட்டுமே இருந்து வந்த நிலையில், 2017 தேர்தலுக்குப் பிறகு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு ரீதியாக எழுச்சி கண்டது. ஏனெனில் அப்போது கோரக்பூரில் இருந்து எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
யோகி ஆதித்யநாத்துடனான இந்த அமைப்பின் தொடர்பு, அதன் உறுப்பினர்கள் காவலர்களாக மாறி, லவ் ஜிகாத் என்ற சந்தேகத்தின் பேரில் வீடுகளுக்குள் நுழைந்து, சந்தேகத்திற்கு இடமின்றி தம்பதிகள் மீது தாக்குதல் மற்றும் கால்நடை கடத்தல்காரர்களை வழிமறித்தல் போன்ற செயல்களில் சுதந்திரமாக இறங்கினர். வாஹினி அமைப்புக்கு எதிர்ப்புகள் அதிகரிக்க, அது இறுதியாக முதல்வர் ஆதித்யநாத்திற்கு நெருக்கடியைத் தந்தது. மே 2017 இல், ஆதித்யநாத் வாஹினி ஊழியர்களிடம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. அப்போதிருந்து, அதன் செயல்பாடுகள் குறைவாகவே இருந்து வந்தநிலையில், இப்போது மட்டுமே வெளிவருகிறது.
வாஹினி அமைப்பின் கோரக்பூர் பொறுப்பாளர் வர்மா, இந்த அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செயல்பாட்டைக் கொண்டிருந்தது என்பதை மறுத்தார். மேலும், “நாங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தோம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், 2017 க்கு முன்பு, நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம், எனவே நாங்கள் மாநில அரசுக்கு எதிராக தர்ணா மற்றும் போராட்டங்களை நடத்தினோம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, அரசின் நலத்திட்டங்களை பிரபலப்படுத்தவும், மக்கள் பயன்பெறவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றும் வர்மா கூறினார்.
தேர்தல் குறித்து வாஹினி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பி.கே.மால் கூறுகையில், நாங்கள் பாஜகவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். வேலை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மகாராஜ்ஜியின் (யோகி ஆதித்யநாத்) தலைமையின் கீழ், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நாங்கள் செயல்படுகிறோம். நாங்கள் அவருக்காக மட்டுமல்ல, பாஜகவுக்காகவும் பாடுபடுகிறோம் என்று கூறினார்.
பாஜக கோரக்பூர் மகாநகர் செய்தித் தொடர்பாளர் பிரஜ்ஷ் மிஸ்ரா கூறுகையில், “வாஹினி அமைப்பின் நிர்வாகிகள் ஏற்கனவே வார்டு மற்றும் மண்டல அளவில் பாஜகவின் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்,” என்றார்.
ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், பூத் அளவிலான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவதன் மூலமும் பாஜக ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது என்று மிஸ்ரா கூறினார்.
கோரக்பூரில் பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, “கோரக்பூர் நகர் பகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷிராம்) தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடப் போவதாக அறிவித்ததையடுத்து தேர்தல் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் சுமார் 45,000 SC/ST வாக்காளர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் கடந்த காலங்களில் கோரக்ஷ்பீத்தில் இருந்து உதவி பெற்றவர்கள். ஆனால் இந்த தொகுதியில் சுமார் 45,000 முஸ்லிம்கள் உள்ளனர். மேலும் ஆசாத் ஒரு முக்கிய தலைவர். நாங்கள் எந்த வாய்ப்பையும் எடுக்க முடியாது.” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil