Shashi Tharoor, Chidambaram support J&K leaders : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சஷி தரூர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Shashi Tharoor tweet
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சஷி தரூர், "நீங்கள் தனியாக இல்லை ஒமர் அப்துல்லா. ஒவ்வொரு இந்திய ஜனநாயகவாதியும் உங்கள் பக்கமும், காஷ்மீர் தலைவர்கள் பக்கமும் நிற்கின்றனர். பாராளுமன்றம் இன்னும் அமர்வில் உள்ளது, எங்கள் குரல்கள் திணறாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஜம்மு & காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எந்த தவறும் செய்யாமல், ஏன் தலைவர்கள் ஒரே இரவில் இப்படி கைது செய்யப்படுகிறார்கள்? காஷ்மீர் மக்கள் நமது குடிமக்கள் என்றால், அவர்களின் தலைவர்களும் நமது கூட்டாளிகளே" என்று சஷி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
P. Chidambaram Tweet
சிதம்பரம் தனது ட்விட்டரில், "ஜம்மு & காஷ்மீர் தலைவர்களின் வீட்டுக் கைது, அரசாங்கம் அதன் முடிவை அடைய அனைத்து ஜனநாயக விதிமுறைகளையும் கொள்கைகளையும் மீறும் என்பதற்கான அறிகுறியாகும். இந்த வீட்டுக் காவலை நான் கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அப்போது, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். மொபைல், பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பு ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் பொதுக் கூட்டமோ அல்லது பேரணியோ நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. “மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது, கல்வி நிலையங்களும் மூடப்பட வேண்டும்” எனற அரசின் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்களது ஐடி கார்டுடன் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பாக பதிவிட்ட ட்வீட்டில், "இன்று நள்ளிரவு முதல் நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இன்னபிற முக்கிய தலைவர்களுக்கு இதற்கான நடைமுறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது உண்மையா என்று அறிந்துகொள்வதற்கு எந்த வழியும் இல்லை. ஆனால், இது உண்மையாக இருந்தால், உங்கள் அனைவரையும், என்ன நடக்க இருக்கிறதோ அதன் மறுபுறத்தில் இருந்து பார்ப்பேன். அல்லா எம்மை காக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல், முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது ட்விட்டரில், "காஷ்மீரில் அமைதிக்காக போராடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் வீட்டுச்சிறையில் இருப்பதை பார்க்கும்போது எவ்வளவு முரணாக உள்ளது. மக்களும் அவர்களின் குரல்களுக்கும் இங்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மதசார்பற்ற ஜனநாயக இந்தியாவை தேர்ந்தெடுத்த காஷ்மீரில் நிலவும் இந்த அடக்குமுறை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.