அமிர்தசரஸில் புகழ்பெற்ற பொற்கோயிலில் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை இதுவரை காவல் துறையினரால் அடையாளம் கண்டறியமுடியவில்லை. கருவறைக்கு நுழைந்த அந்நபரை, சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி(SGBC) நிர்வாகிகளும், பக்தர்களும் பிடித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடல் எஸ்ஜிபிசி தலைமையகத்தின் வாசலுக்கு வெளியே வைக்கப்பட்டது.
இது குறித்து டிசிபி பர்மிந்தர் சிங் பந்தல் கூறுகையில், " அந்நபர் எஸ்ஜிபிசி தலைமையகத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு தாக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது" என்றார்.
எஸ்ஜிபிசி அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, " நேற்று மாலை 5.50 மணியளவில் பிராா்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் ஒருவர் திடீரென நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முற்பட்டுள்ளார். அதற்குள், அங்கிருந்த பாதுகாவர்களும், பக்தர்களும் அந்நபரை பிடித்துவிட்டனர்" என்றார்.
இச்சம்பவம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நேரலையாக ஒளிபரப்பானதால் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் நிர்வாகிகள் பிடித்த அந்த அடையாளம் தெரியாத நபரை முதலில் பொற்கோயிலில் உள்ள தனி அறையில் வைத்து விசாரித்துள்ளனர். பின்னர், வீல் சேரில் எஸ்ஜிபிசி தலைமையகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் அந்நபரை சிலர் பலமாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அந்நபரிடம் எவ்வித அடையாள அட்டையை இல்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சம்பவம் நடைபெறுவது முதன்முறை அல்ல. நான்கு நாள்களில் இரண்டாவது முறையாக நடந்துள்ளது. முன்னதாக, பொற்கோயிலின் சரோவரில் (புனித தொட்டி) குட்காவை (குர்பானியின் வசனங்கள் அடங்கிய புத்தகம்) வீசினார். அவரை கோயில் நிர்வாகிகள் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்நபர், ரன்பீர் சிங் என அடைாளம் காணப்பட்டார்.
இதுகுறித்து பேசிய எஸ்ஜிபிசி தலைவர் தாமி, "இச்சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளைத் தூண்டி பஞ்சாபின் அமைதி சூழலைக் கெடுக்கும் சதி" என குற்றச்சாட்டினார்.
இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.