உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் சிறுமி காணாமல் போன வழக்கில், காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 22 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோட்வாலி காவல் நிலையத்தின் காவல் நிலைய பொறுப்பாளர் உட்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அல்தாப் தனது சட்டை கயிற்றை கழுத்தில் இறுக்கிக்கொண்டு, அங்கிருந்த பைப்பில் கயிற்றைக் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
காவல் துறையினர் கூற்றுப்படி, தங்களது 16 வயது மகளை, அல்தாப் என்ற இளைஞர் கடத்தி சென்றுவிட்டதாக இந்து குடும்பம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கஸ்கஞ்ச் அருகே அஹிராலி கிராமத்தை சேர்ந்த அல்தாப்பை, விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் போலீஸ் காவலில் இருந்த அல்தாப் திடீரென மரணமடைந்துள்ளார். அவரை கழிவறையில் பார்த்ததும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அல்தாப் உடற்கூராய்வும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
அல்தாப் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளனர். இருப்பினும், மாயமான 10 ஆம் வகுப்பு மாணவியை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவரை தேடும் பணியில் காவல் துறையினர் உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
அல்தாப் குடும்பத்தினர், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. போலீஸ் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் வாட்டர் பைப் வெறும் இரண்டு முதல் மூன்று அடி மட்டுமே உயரம் கொண்டது. இருப்பினும், இவ்வழக்கு குறித்து விசாரணை தொடர போவதில்லை என்றனர்.
அல்தாப் தந்தை முதலில் தனது மகனை போலீசார் அடித்துகொன்றுவிட்டனர் என குற்றச்சாட்டிய நிலையில், மறுநாள் அதனை மறுத்து வீடியோ வெளியிட்டார். கோபத்தில் பேசிவிட்டதாகவும், அல்தாப் தற்கொலை செய்துகொண்டது தான் உண்ணை. காவல் துறையினர் நடவடிக்கைகளில் திருப்தி அடைகிறேன் என்றார்.
அல்தாப்பின் மாமா ஷாகிர் அலி கூறுகையில், "வழக்கைத் தொடர அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லை. நான் அல்தாபை சந்தித்தபோது அவர் உயிருடன் இருந்தார். பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது, என்றார்.
காஸ்கஞ்ச் எஸ்.பி போத்ரே ரோஹன் பிரமோத் கூறுகையில், " விசாரணையின் போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என அல்தாப் கேட்டுள்ளார். காவல் துறையினர் அவரை அனுமதித்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், கழிவறை சென்று பார்த்தபோது, தனது சட்டை கயிற்றை தனது கழுத்தில் இறுக்கி தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. அவரை உடனடியாக மீட்டு, அருகிலிருந்த மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்றோம். அப்போது, மூச்சு இருந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காணாமல் போன சிறுமியும், அல்தாப்பும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் காதலை முறித்துவிட்டதாக அல்தாப் விசாரணையில் கூறினார். அதற்கான ஆதாரம் உள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு, சிறுமி வீட்டில் நடந்த கட்டுமான பணியின்போது, அல்தாப் அவரை சந்தித்துள்ளார்.
கோட்வாலி காவல் நிலையம் நகரின் நடுவில் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக உள்ளது. மக்கள் சாட்சி இல்லாமல், அல்தாபை யாரும் அடித்திருக்க முடியாது.
அவரது குடும்பத்தினர் போலீஸ் செயலில் திருப்தியடைந்துள்ளனர். ஒருவேளை காவல் துறையினர் மீது புகார் வந்தால், வழக்கு பதிவு செய்யப்படும். அல்தாப்பின் மரணம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் விசாரித்து வருகிறார். அதே நேரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கஸ்கஞ்ச் போலீஸ் நிலைய ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், ஒரு ஏட்டு, போலீஸ்காரர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.