ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர், ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி, எம்.எல்.ஏ. மற்றும் எம்பி பதவிகளை வகித்ததோடு, அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர், கடந்த சில தினங்களாக, ஐதராபாத்தில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பங்கேற்றார். நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவுக்கு திரும்பினார். இந்த நிலையில், நேற்று மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார்.
விவேகானந்த ரெட்டி படுகொலை
இதுதொடர்பாக, அவரது உதவியாளர் சந்தேகம் எழுப்பியதன் பேரில், விவேகானந்த ரெட்டியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். எனினும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, கடப்பாவில் உள்ள புலிவேந்துலா பகுதியில் விவேகாநந்தா ரெட்டி அவரது வீட்டின் குளியல் அறையில் உயிரிழந்த நிலையில் இருந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டது. பின்னர் இந்த மரணத்தின் சந்தேகத்தால் உடற்கூராய்வு நடத்தப்பட்டு, தலை, வலது கை மற்றும் தொடையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இந்த வழக்கை ஐபிசி 302 வழக்கின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தனர்.
1980ம் ஆண்டில் இருந்து ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் நடக்கும் மூன்றாவது அசாதாரண மரணம் இதுவாகும். 1998ம் ஆண்டு மே 23ம் தேதி விவேகாநந்தரின் தந்தை ராஜா ரெட்டி ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டார். aப்போது ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தான் மாநில காங்கிரஸ் கட்சிக்கு முதன்மை வகித்தார். 2004ம் ஆண்டு மே மாதம் ஆந்திராவில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. 5 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.
ஆனால், அவரது இரண்டாவது முறை ஆடியின் முதல் 4 மாதத்திலேயே அவர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. மறுநாள் அவர் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரில் இருந்து சடலமாக அவர் மீட்கப்பட்டார். பின் நாட்களில் அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டி மீதும் சந்தேகங்கள் திரும்பியது.
இப்போது விவேகாநந்தாவின் மரணத்தை தொடர்ந்து ஜகன் மோகன் ரெட்டி டிடிபி தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்று குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் அளித்த விவரத்தில், விவேகாநந்தா கடந்த வியாழக்கிழமை ஒய்.எஸ்.ஆர்.சி.பி கூட்டத்தை மைடூக்கூர் பகுதியில் முடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அவரது மகளும் மனைவியும் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வீட்டில் தனியாகவே இருந்துள்ளார்.
மறுநாள் வெள்ளிக்கிழமை, அவர் சடலமாக இருப்பதை அவரின் தனிப்பட்ட உதவியாளர் எம்.கிருஷ்ணா ரெட்டியும், பிற பணியாட்கள் பார்த்துள்ளனர். இது குறித்து புகார் கொடுக்கும்போது, “நீண்ட நேரம் கதவை தட்டியும் விவேகாநந்தா ரெட்டி திறக்கவில்லை எனவே பின் வாசல் வழியாக வீட்டிற்கு சென்றோம். பின்னால் இருக்கும் கதவு திறந்திருந்தது”, என்று கிருஷ்ணா கூறினார். மேலும், “இரத்த வெள்ளத்தில் அவரை நாங்கள் பாத்ரூமில் பார்த்தோம்.” என்றும் கூறினார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.பி. லட்சுமிநாராயணா கூறுகையில், காயங்களின் ஆழத்தைப் பார்க்கும்போது அவர் கோடாலியால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது என்றார்.
கடப்பா எஸ்.பி ராகுல் தேவ் ஷர்மா அளித்த விவரத்தில், விவேகாநந்தா நடு இரவு முதல் காலை 5 மணிக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார். முதலில் அவர் நெஞ்சு வலியால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், பின்னர் சம்பவ இடத்தை பார்த்த பின்னரே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஒரு சிலரை காவலில் வைத்து விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.
வரும் ஏப்ரல் 11ம் தேதி ஆந்திராவில் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் அவரின் மரணம் ஆழ்ந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.